Published : 17 Nov 2019 10:56 AM
Last Updated : 17 Nov 2019 10:56 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வதில் சிக்கல்: தேர்தல் ஆணைய இணையதளத்தில் தமிழ் இல்லை - ‘இந்து தமிழ் - உங்கள் குரல்’ சேவையில் வாசகர் புகார்

சென்னை

தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் மாநில மொழிகள் பட்டிய லில் தமிழ் இன்னும் சேர்க்கப் படவில்லை. இதனால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தர வுப்படி மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு ‘வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்’ என்ற அடிப்படையில் புதிய திட்டமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின்படி, தேர்தல் ஆணையத்தின் இணையதளம், கைபேசி செயலி மூலம் வாக்காளர் களே தங்கள் விவரங்களை பட்டி யலில் சரிபார்க்கவோ, திருத்தவோ முடியும். இதற்கான இறுதி நாள் வரும் 30-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-ம் தேதி வெளியாக உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும், தமிழகத்தில் சென்னை மட்டும் மிகவும் பின் தங்கியிருந்தது. தற்போது மாநக ராட்சி நிர்வாகத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், முகவரி மாற்றத்துக்கும் விண்ணப் பிக்கும்போது, தேர்தல் ஆணையத் தின் இணையதளத்தில் தமிழ் இல்லாததால், சரியாக விவரங் களை பதிவு செய்ய முடியவில்லை என்றும். அப்படியே பதிவு செய்து விண்ணப்பித்தாலும் விவர மாற்றங் கள் சரிவர செய்யப்படுவது இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ‘இந்து தமிழ்’ வாசகர் ஆர்.பத்மநாபன் ‘உங்கள் குரல்’ தொலைபேசி சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது:

நான் வில்லிவாக்கத்தில் இருந்து அரும்பாக்கத்துக்கு இடம் மாறி னேன். வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றத்துக்கு 6 மாதங் களுக்கு முன்பு அனைத்து ஆவ ணங்களுடன் விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை மாற்றப்பட வில்லை. இவ்வாறான நிலை இருப்பதால்தான், வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை.

இணையதளத்தில் விண்ணப் பித்தபோதும், அடுத்தகட்ட நகர்வு எதுவும் வரவில்லை. தவிர, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஆங்கிலம், இந்தி தவிர மாநில மொழிகளில் மலையாளம் மட்டுமே உள்ளது. தமிழ் இல்லை. ஆனால் தமிழகத்துக்கான வாக்காளர் பட்டியலில் ஆங்கிலம், தமிழில்தான் உள்ளீடு செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால், தமிழில் பெயர்கள் தானாக மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் தவறாக உள்ளது.

தமிழில் நன்றாக தட்டச்சு செய்ய தெரிந்தவர்களால் மட்டுமே பெயரை மாற்ற முடியும் என்ற நிலை உள்ளது. சாமானியர்களும் எளிதாக மாற்றம் செய்வதற்கேற்ப இதில் வசதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கேட்டபோது தமிழக தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கான இணைய தளத்தில், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும்போது, தமிழ், ஆங்கிலம் இருந்தது. தவறுகளை எளிதாக சரிசெய்ய முடிந்தது. ஆனால், தற்போது ‘NVSP’ எனப் படும் தேசிய வாக்காளர் சேவை இணையத்தில் மட்டுமே நாம் இப்பணிகளை மேற்கொள்ள முடி யும். அந்த இணையதளத்தில் தேர்தல் ஆணையம்தான் மாற்றங் கள் செய்ய முடியும்.

தமிழ் மொழியில் பதிவு செய் வதற்கான எழுத்துருக்களை ஆணையம் கேட்டிருந்தது. அதன் படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் இருந்து தமிழ் எழுத்துருக்கள், அதற்கான லேபிள்கள் உள்ளிட்டவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப் பப்பட்டு வெகுநாட்கள் ஆகின்றன. இதுபற்றி தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகளிடமும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழாக்கத்துக்கு அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துவிட்டோம். இனி தேர்தல் ஆணையம்தான் அதை செயல் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதுதொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத் துக்கு மீண்டும் கொண்டு செல்லப் படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

2020 பிப்.7-ல் இறுதி வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியலில் ஆண்டுதோறும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த ஆண்டின் ஜனவரி மாத முதல் வாரத்தில்தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்த முறை பிப்ரவரியில் வெளியாகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் 2020 ஜனவரி 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். அவை தொடர்பாக ஜனவரி 27-ம் தேதிக்குள் தீர்வு காணப்படும். திருத்தங்கள், பெயர் சேர்ப்பு தொடர்பான துணை வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 4-ம் தேதி தயாரிக்கப்படும்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 2020 பிப்ரவரி 7-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x