

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு உற்சவ காலங்களில் ஐயப்ப பக்தர்களுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம், குடிநீர், மருத்துவ உதவிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாநிலத் தலைவர் மு.விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு பம்பை முதல் சந்நிதானம் வரை உள்ள முகாம்களில் தூய்மையான சுக்கு நீர் வழங்குதல், இலவச மருத்துவ உதவி, ஸ்டெச்சர் சர்வீஸ், ஆக்ஸிஜன் பார்லரில் பணியாற்றுதல், துப்புரவுப் பணி செய்தல் உள்ளிட்ட சேவைகளை சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐயப்ப பக்தர்கள் மலையேறும் போது மூச்சுத் திணறல், மாரடைப்பு, உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவர்களை உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ முகாம் அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எமர்ஜென்ஸி பிரிவு தொண்டர்கள், 24 மணி நேரமும் முக்கியமான இடங்களில் ஸ்டெச்சருடன் தயார் நிலையில் இருக்கவும், மூன்று வேளையும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழ் மாநில அமைப்பின் சார்பில் சென்னை, மதுரை, வேலூர், திருச்சி, கன்னியாகுமரி, தேனி, வீரபாண்டி, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 14 இடங்களில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க முகாம்கள் அமைக்கப்பட்டு பக்தர் களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் செய்வதற்காக சுமார் 3 ஆயிரம் தொண்டர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மு.விஸ்வநாதன் தெரிவித்துள் ளார்.