Published : 17 Nov 2019 09:45 AM
Last Updated : 17 Nov 2019 09:45 AM

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4.22 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி: இதமான தட்பவெப்பத்தால் செழித்து வளரும் பயிர்கள்

திருவாரூர் மாவட்டம் சவளக்காரன் பகுதியில் செழித்து வளர்ந்துள்ள சம்பா நெற்பயிர்கள். படம்: எஸ்.கோபாலகிருஷ்ணன்

எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.22 லட்சம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ள நிலையில், இதமான தட்பவெப்ப சூழல் நிலவுவதால் பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

போதிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இந்த ஆண்டு ஆக.13-ம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து அணை யிலிருந்து போதிய நீர் திறக்கப்பட்டு வருவதாலும், கடந்த மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையாலும் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

நடவுப் பணிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், திருச்சி மாவட்டத்தில் ஒரு பகுதி என காவிரி ஆற்றுப் பாசனத்தை நம்பி வழக்கமாக 4.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டில் இதுவரை 4.22 லட்சம் ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம்

இந்த பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் வழக்கமான சாகுபடி பரப்பு 1.36 லட்சம் ஹெக்டேர். இதில் இதுவரை 9,400 ஹெக்டேர் நேரடி விதைப்பும் சேர்த்து 1.16 லட்சம் ஹெக்டேரில் நடவு முடிந்துள்ளது. மேலும், 20 ஆயிரம் ஹெக்டேரில் நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை இம்மாத இறுதிக்குள் முடிவடையும்.

டெல்டா மாவட்டங்களில் நிலவும் இதமான தட்பவெப்ப நிலை காரணமாக பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகின்றன. பிபிடி 5204 ரக பயிர்களில் ஒரு சில இடங்களில் இலைப்புள்ளி நோய் காணப்படுகிறது. இது கட்டுப்படுத்தக் கூடியதுதான் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம்

இந்த பருவத்தில் திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 1.49 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு இதுவரை 78 ஆயிரம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு உட்பட 1,48,500 ஹெக்டேரில் சாகுபடி பணிகள் முடிந்துள்ளன. பயிர்களில் ஒருசில இடங்களில் மஞ்சள் நோய் காணப் படுகிறது. இதற்கு சூடோமோனாஸ் மற்றும் சாணக் கரைசலை தெளிக்குமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம்

வழக்கமாக இந்த பருவத்தில் நாகப் பட்டினம் மாவட்டத்தில் 1,32 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு இதுவரை 70 ஆயிரம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு உட்பட 1,31,500 ஹெக்டேரில் சாகுபடி முடிந்துள்ளது. மீதமுள்ளவை ஒரு வாரத்துக்குள் நடவு செய்யப்பட்டு விடும்.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டத்தின் வழக்கமான சாகுபடி பரப்பு 45 ஆயிரம் ஹெக்டேர். இதில் இதுவரை 30 ஆயிரம் ஹெக்டேரில் நடவு முடிந்துள்ளது. மீதமுள்ளவை இம்மாத இறுதிக்குள் முடிந்து விடும்.

சம்பா பருவத்தில் விவசாயிகள் பெரும்பாலும் 130 முதல் 135 நாட்கள் வயதுடைய பிபிடி 5204, கோ.ஆர்-50, சொர்ணா சப் உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர்.

அவ்வப்போது பெய்துவரும் மழையைப் பயன்படுத்தி நெற்பயிர்களுக்கு மேல் உரமாக யூரியா, பொட்டாஷ் உரங்களை இட்டால் பயிர்கள் நன்றாக தூர்பிடித்து வளரும் என்பதால், இந்த உரங்களுக்கு கடந்த மாதத்தில் தட்டுப்பாடு நிலவியது.

இருப்பினும், தமிழக அரசு துரித நட வடிக்கை எடுத்து உரங்களை வரவழைத்து டெல்டா மாவட்டங்களில் இருப்பு வைத் துள்ளது.

இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,650 டன், திருவாரூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் டன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3,500 டன், திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் டன் யூரியா, கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு மேல் உரமாக ஏக்கருக்கு 22 கிலோ மட்டுமே இட வேண்டும். அதிகமாக உரமிடுவது பூச்சித் தாக்குதலுக்கு காரணமாகிவிடும் என்று வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x