Published : 18 Aug 2015 08:38 AM
Last Updated : 18 Aug 2015 08:38 AM

தேசிய அளவில் ஜூலையில் நடந்த மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் மாநில அரசுகளால் நிரப்பப்படுகின்றன. எஞ்சிய 15 சதவீத இடங்கள் தேசிய அளவிலான ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 6.30 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக் கப்பட்டதால் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 15-ம் தேதி உத்தர விட்டது. மீண்டும் தேர்வு நடத்த மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உத்தர விட்டப்பட்டது. அதன்படி சிபிஎஸ்இ சார்பில் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்டது.

தமிழகத்தில் 50 சதவீத மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

3-ம்கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்த 85 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.

17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 912 பிடிஎஸ் இடங்களில் 911 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 398 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 15 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப அளிக்கப்படும் இடங்கள் 3-ம்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x