Published : 16 Nov 2019 05:08 PM
Last Updated : 16 Nov 2019 05:08 PM

தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்ததால் எகிறும் வெங்காய விலை: வியாபாரிகள் வேதனை, மக்கள் பாதிப்பு

மதுரை

தமிழகத்தில் குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக மழை பெய்ததோடு சாகுபடி பரப்பும் குறைந்ததால் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை ‘கிடுகிடு’வென உயர்கிறது. இத்துடன் இறக்குமதி தாமதமும் சேர்ந்து கொண்டதால் வியாபாரிகளுக்கு நஷ்டத்தையும் சாமான்யர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது வெங்காயம்.

வெங்காயம் இரண்டு, மூன்று மழையை நம்பி வறட்சியில் போடக்கூடிய மானாவாரி பயிர்.தமிழகத்தில் பெரிய வெங்காயத்துடன் ஒப்பிடும்போது சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறைவாக உள்ளது. தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குறைந்த நீர் ஆதாரத்தை கொண்டு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

சமையலுக்கு வெங்காயம் தினமும் தேவைப்படக்கூடிய ஒரு முக்கிய இணைப்பு காய்கறியாக வெங்காயம் உள்ளது. அசைவம், சைவம் உள்ளிட்ட எல்லாவிதமான சமையலுக்கும் வெங்காயம் இல்லாமல் செய்ய முடியாது.

இத்தனைக்கும் அதில் இருப்பது, 89 சதவீதம் நீர். 9 சதவீதம் கார்போஹைடிரேட் மற்றும் வெறும் 1 சதவீதம் புரதச் சத்துதான். ஆனாலும், அதன் வாசனை, சுவை மற்றும் சில மருத்துவ குணங்களுக்காக அது காலங்காலமாக விரும்பப்படுகிறது.

அதனால், ஆண்டு முழுவதுமே வெங்காயத்திற்கு சீரான தேவை இருந்து கொண்டிருக்கிறது. தற்போது உள் நாட்டு சந்தையில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இருப்பு குறைந்துவிட்டது. சந்தைகளுக்கு வரத்து குறைந்துவிட்டதால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெங்காய சந்தைகளில் இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.70க்கும் விற்றது. சில்லரை விற்பனைக் கடைகளில் இந்த வெங்காயங்கள் கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதனால், நடுத்தர, ஏழை மக்கள், சமையலுக்கு வெங்காயம் பயன்படுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், "மழை அதிகமாகும்போது வெங்காயம் விளைச்சல் குறைவாகும். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழை வந்தவுடன் விவசாயிகள் வெங்காய சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிருக்கு சென்றுவிட்டார்கள்.

அதனால், சாகுபடி பரப்பு குறைந்து விளைச்சல் ஒருபக்கம் குறைந்ததோடு மற்றொரு பக்கம் சாகுபடி பரப்பும் குறைந்ததால் சந்தைகளில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலை கடந்த மே மாதத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பு குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கு விற்ற வெங்காயத்தின் விலை இப்போது ரூ.2 ஆயிரம் உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரமாக உள்ளது.

அன்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் வாங்குவதற்கு முயற்சிகள் நடக்கிறது. ஈரான், ஈராக்கில் வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து கப்பல் மூலம் வாங்குவதற்கன முயற்சிகள் நடக்கிறது.

வெங்காயம் விலை உடனே சீராகாது. வெங்காயத்தை வாங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமத்தாலே பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. 15 நாட்களில் வெங்காயம் தட்டுப்பாடு சீராக வாய்ப்புள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x