

முரசொலி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் 19-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தைப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலப் போராட்டம் குறித்து பாராட்டி பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக பஞ்சமி நிலம் குறித்துப் பேசுகிறது. ஆனால் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என பதிவிட்டுருந்தார்.
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என்பதை நான் நிரூபித்தால் ராமதாஸும், அன்புமணியும் அரசியலை விட்டே விலகத்தயாரா? அப்படி இருந்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என ஸ்டாலின் சவால் விட்டார். அதன்படி முரசொலி அலுவலகத்தின் பட்டாவை வெளியிட்டார்.
ஆனால் அதுமட்டும் போதாது. வேறு சில ஆவணங்களும் வேண்டும் என ராமதாஸ் பதில் அளித்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் எதிரொலித்தது. திமுகவை பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன. பதிலுக்கு திமுகவும் விமர்சித்தது.
இந்நிலையில் பாஜக மாநிலச் செயலாளர் முரசொலி நிலம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையருக்குப் புகார் அளித்தார். டெல்லிக்கும் நேரில் சென்று புகார் அளித்தார். இதையடுத்து தேசிய பட்டியலின ஆணையம் தலைமைச் செயலருக்கு ஒரு கடிதத்தை எழுதியது. அதில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் சென்னை வருகிறார். அவருடன் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் வருவார். நிலம் குறித்த விவகாரம் அவர்கள் கேட்கும் ஆவணங்களை அளிக்க வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் முரசொலி நில விவகாரத்தில் புதிய திருப்பமாக முரசொலி நிர்வாக இயக்குனர் பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒரு சம்மனை அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் முரசொலி பஞ்சமி நில விவகாரம் சம்பந்தமாக வரும் 19-ம் தேதி மதியம் 3 மணிக்கு சென்னை சாஸ்திரி பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணைய துணைத் தலைவர் முருகன் முன்பு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு விசாரணைக்கு ஆஜராகும்போது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம், நிலம் தொடர்புடைய ஆவணங்கள், தொடர்புடைய கோப்புகள், பத்திரங்கள், கேஸ் டைரி உள்ளிட்டவற்றுடன் விசாரணையை எளிதாக நடத்த உதவிடும் வகையில் சரியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்மன் நகல் தலைமைச் செயலர் மற்றும் பாஜக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பெரியசாமிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.