

மதுரை
ஐஐடி மாணவி தற்கொலை விசாரணை விருப்பு வெறுப்பில்லாமல் நடைபெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
திராவிடர் கழகம் சார்பில் விருதுநகரில் நடைபெறும் "பகுத்தறிவாளர் கழக" பொன் விழா மாநாட்டில் கலந்துகொள்ள வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று (சனிக்கிழமை) மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னை ஐஐடியில் இதுவரை பல பேர் தற்கொலை செய்துள்ளனர்.
ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃபா தற்கொலை தொடர்பாக நடைபெறும் விசாரணை விருப்பு வெறுப்பில்லாமல் நடைபெற வேண்டும். இனிமேலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறக்கூடாது.
"தமிழ்நாடு பாதுகாப்பான இடம் என்பதால் மகளைப் படிக்க அனுப்பினோம். ஆனால் இங்கேயே பாதுகாப்பு இல்லையே" என பெற்றோர்கள் கூறினார்கள். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் குறிப்பாக பெரியார் மண்ணில் இப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.
அது போல் சபரிமலை விஷயத்தில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு தடையேதும் இல்லை. இந்த வழக்கை 7 பேர் கொண்ட விசாலமான அமர்விற்கு மாற்றி விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஐயப்பன் கோயிலில் தரிசிக்க விண்ணப்பித்த அத்தனை பேரையும் அனுமதித்தால் தான் சட்டப்படி அது உரிமை ஆகும். இதனை மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததாகும்" எனக் கூறினார்.
தொடர்ந்து விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழக அரசு நீட் தேர்வில் இரட்டை வேடம் போடுகிறது. நீட் தேர்வு சட்டத்தில் எந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு விதிவிலக்கு அளிக்கலாம் என்று உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் 5, 8, 10, பிளஸ்-2 என பொது தேர்வு நடத்துவது மேலும், மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு, மேல்படிப்புக்குத் தேர்வு போன்றவை காரணமாக பெற்றோரும், மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த கல்வி முறை மாற்றப்பட வேண்டும்.
வள்ளுவருக்கு எந்த மதமோ, சாதியோ கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. வள்ளுவர் என்பதே சங்ககாலத்திற்கு முன்னாள் இருந்த முதலமைச்சர் பதவி என்று பாரதிதாசன் கூறியுள்ளார். திருக்குறள் எல்லா உயிருக்கும் பொருந்தும். திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பு இருந்தும் கடவுள் என்ற சொல், ஆத்மா, மதம், சாதி என்ற சொற்களோ கிடையாது.
மக்கள் மதம் பிடித்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுள்ளுவரை மதம் பிடித்தவராக ஆக்கக் கூடாது. மீறி நடந்தால் அதன் எதிரொலியை அவர்கள் எல்லா தேர்தலிலும் சந்திப்பார்கள், எல்லா தெருக்களிலும் சந்திப்பார்கள்" என்று கூறினார்.
-எஸ்.ஸ்ரீநிவாசகன், இ.மணிகண்டன்