

கோவில்பட்டி
திரைப்படங்களின் தலைப்புக்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் பருவமழை காலத்தை முன்னிட்டு கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த் தாக்குதலுக்கு தேவையான சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகள் உள்ளன.
உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை முதன்முதலில் போட்டியிட விரும்புபவர்கள் இடம் விருப்ப மனுக்களை பெற்றது அதிமுக தான். அதன் பின்னர்தான் திமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.
வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் உள்ள வார்டுகளில் சுழற்சி முறையில்யார் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் வெளிப்படையாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைவிட வெளிப்படைத்தன்மை என்ன வேண்டும் என முத்தரசன்தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.
திரையரங்குகளில் திருக்குறள்..
திரையரங்குகளில் முன்பு திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல் திரைப்படங்களின் தலைப்புக்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும்.
வெற்றிடம் இல்லை..
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடங்களை அவர்கள்தான் நிறைவு செய்ய முடியும். அவர்களுக்கு பின்னர் கட்சியில் வெற்றிடம் இல்லாமல் இருப்பதால்தான் ஆட்சி முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.
தமிழக முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் வெற்றிடம் இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் மட்டுமல்ல தமிழகத்தையே வழி நடத்தி வருகின்றனர். வெற்றிடம் என்று நினைப்பவர்களுக்கு, அதை நினைக்க உரிமை உண்டு. யாருக்கு வெற்றிடம் எங்கு வெற்றிடம் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழகத்தைப் பொருத்தவரை வெற்றிடம் என்பதே இல்லை.
புத்தாண்டுக்குள் பத்திரிகையாளர்கள் நலவாரியம்..
பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன. வாரியம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டுக்குள் நிச்சயமாக வாரியம் அமைக்கப்படும், என்றார் அவர்.