Published : 25 Aug 2015 10:14 AM
Last Updated : 25 Aug 2015 10:14 AM

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்விக்கான தடையை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வித் துறைக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் கடந்த 21-ம் தேதி டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உயர் கல்வித் துறை செயலாளர் வி.ஓபராய் ஆகியோரை சந்தித்தனர்.

அப்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வித் துறைக்கு யுஜிசி விதித்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தொலைதூர கல்வி மையங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

கடந்த 2012-ல் யுஜிசி இதுபோன்ற தடையை விதித்த போது சென்னை உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து யுஜிசி மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது மீண்டும் யுஜிசி தடை விதித்துள்ளது சரியானது அல்ல.

அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூர கல்வித் துறையின் மூலம் 4 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். யுஜிசியின் நடவடிக்கையால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 4 ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தொலைதூர கல்விக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும் என ஸ்மிருதி இரானியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x