

வேலூர் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீனை போலீஸார் சனிக்கிழமை திடீரென கோவைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதனால் கோவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜ.க, இந்து பிரமுகர்கள் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் போலீஸ் பக்ருதீன், அவரது கூட்டாளிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் குடியாத்தம் நகைக் கடை ஊழியர் பஞ்சாட்சரம் என்பவரை ஒரு கும்பல் 2013-ம் ஆண்டு கொலை செய்துவிட்டு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.
இந்த வழக்கில் போலீஸ் பக்ருதீனுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறி, இவர்களை விசாரிப்பதற்காகக் காவலில் எடுக்க வேலூர் 2-வது நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்காக மூவரும் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2-ல் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் ரேவதி, மூவரையும் வரும் 27-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க அனுமதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை விசாரணைக்காக சிபிசிஐடி போலீஸார் அழைத்துச் சென்றனர். இவர்களில் போலீஸ் பக்ருதீனை மட்டும் வேலூர் போலீஸார் கோவை அழைத்து வந்தனர்.
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள முக்கியமான வணிக நிறுவனத்திற்கு அருகே உள்ள சில கடைகளுக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதன் பின்னர் வேலூர் திரும்பியதாக கோவை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.