

திமுகவில் நடப்பது மன்னராட்சி; அதிமுகவில் நடப்பது மக்களாட்சி என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெற அதிமுக பல்வேறு வழிகளில் ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை மாவட்டத்தில் தொடர் ஜோதி நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 5 நாட்கள் ஜோதி நடைபயணம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கடந்த புதன்கிழமையன்று தொடங்கியது. இன்று (சனிக்கிழமை) நிறைவுபெற்றது.
நிறைவு நாள் பயணம் மதுரையை அடுத்த பேரையூரில் தொடங்கி திருமங்கலத்தில் முடிவடைந்தது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார், "திமுகவில் நடப்பது மன்னராட்சி; அதிமுகவில் நடப்பது மக்களாட்சி. அதிமுக தலைவர்கள் மக்களால் மகுடம் சூட்டப்பட்டவர்கள். திமுக எப்போதோ வாரிசு கட்சியாகிவிட்டது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நதிநீர் பிரச்சினையில் என்ன செய்தார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிதான் விளக்க வேண்டும்" என்றார்.