

தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பாலாலய யாகசாலைக்காக பந்தல்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.
23 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேத்துக்காக பாலாலய யாகசாலை அமைப்பதற்காக நேற்று காலை பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி ஈசானிய மூலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நவ .29-ம் தேதி நான்கு கால யாகசாலை பூஜை தொடங்க உள்ளது. டிச.2-ம் தேதி பாலாலயம் தொடங்கினால் கும்பாபிஷேகம் நடைபெறும் வரை கோயிலில் மூலவர் பெருவுடையார், அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு திரை போடப்பட்டுவிடும், அங்கு வழிபாடு எதுவும் நடைபெறாது.
கோயில் கும்பாபிஷேகத்தை வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்தும் வகையில் சிவாச்சாரியார்கள் மூன்று தேதிகளைக் குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக அரசின் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளனர். கும்பாபிஷேகத்துக்கான தேதியை தமிழக முதல்வர் அல்லது அறநிலையத் துறை அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர்தான் அறிவிக்க முடியும்.
இந்நிலையில், பிப்.5-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.