Published : 16 Nov 2019 09:33 AM
Last Updated : 16 Nov 2019 09:33 AM

அணைக்கட்டில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அமைச்சர் வீரமணி - திமுக எம்எல்ஏ வாக்குவாதம்: இரு கட்சித் தொண்டர்களிடையே கைகலப்பு

அணைக்கட்டில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் கே.சி. வீரமணிக்கும், திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக - திமுக தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்வுக்கூட்டம் அணைக்கட்டில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார். இதில், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2,153 பயனாளிகளுக்கு 4 கோடியே 93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினார்.

அப்போது, அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் திமுகவைச் சேர்ந்த ஏ.பி. நந்தகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, "தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது. இதில், திமுக தொகுதிகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

ஏற்கெனவே எனது தொகுதி மக்களுக்காக பல்வேறு வசதிகளை கேட்டு பலமுறை மனு அளித்துள்ளேன். அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, முதியோர் உதவி, திருமண நிதியுதவி , கல்வி உதவி, விதவை உதவித்தொகை என ஏராளமானோரின் மனுக்களை கொடுத்தும் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

அணைக்கட்டு தொகுதியில் திமுக வெற்றிபெற்றதால் ஆளும் கட்சியினர் இந்த தொகுதியை புறக்கணிப்பதாக நான் கருதுகிறேன். எனது தொகுதிக்கு உட்பட்ட பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்பவருக்கு விதவை உதவித் தொகை கேட்டு கிராமசபை கூட்டம், மக்கள் குறை தீர்வுக்கூட்டம் என பலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது, அமைச்சரிடம் அந்த மனுவை காட்டி, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர் என ஆவேசமாக கேட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் வீரமணி, அரசை விமர்சித்து திமுக எம்எல்ஏ விளம்பரம் தேட பார்க்கிறார். எனவே, அவரிடமிருந்து மைக்கை பறிக்குமாறு அதிமுக நிர்வாகிகளிடம் கூறினார். உடனே, மேடையில் அமர்ந்திருந்த வேலூர் மாவட்ட ஆவின் தலைவர் வேலழகன் மற்றும் நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்த எம்எல்ஏ நந்தகுமாரின் மைக்கை பறித்தனர்.

அப்போது, அமைச்சர் கே.சி.வீரமணிக்கும், எம்எல்ஏ நந்தகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதைபார்த்து ஆவேசமடைந்த அதிமுக-திமுக கட்சி தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், மக்கள் குறை தீர்வுக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து சென்று இரு கட்சியினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து, எம்எல்ஏ நந்தகுமார் தனது கட்சியினருடன் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினார். அதன்பிறகு, மக்கள் குறைதீர்வு கூட்டம் அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x