

சினிமாவால்தான் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இடைத்தேர்தலில் தோற்றதன் மூலம் திமுக ஜீரோவாகிவிட்டது. ஸ்டாலினைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டார். இதை மக்கள் இன்றைக்கு புரிந்து கொண்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டப்பேரவை பொதுத்தேர்தலாக இருந்தாலும் அதிமுக 100 சதவீதம் வெற்றிபெறும்.
தமிழகத்தை பொறுத்தவரை காற்று மாசு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று சொல்லதான் ரஜினிக்குத் தெரியும். வேறு எதுவும் தெரியாது. முதல்வர், துணை முதல்வரைத் தவிர ஆளுமையுள்ள தலைவர் வேறு யாரும் இல்லை.
விவசாயம், தொழில்துறை என அனைத்தையும் இவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். இவர்களைப் பார்த்தால், அவருக்கு தலைவர்களாகத் தெரியவில்லையா? எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் நாட்டைப்பற்றி அறிந்த நடிகர்கள் யாரும் இல்லை.
திரைப்படங்கள் வெளியாகும்போது முதல்வராகி, நாட்டைக் காப்பதாக அரசியல் பேசும் நடிகர்கள், படம் ஓடிய பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். அடுத்த படம் வெளியாகும்போது மீண்டும் பேட்டி கொடுக்க வருகின்றனர். சினிமாவால்தான் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஒருசில படங்களில், துப்பாக்கியும், கத்தியும் எடுத்துக்கொண்டு சண்டைஇடுவதை பார்த்து இளைஞர்களும் கெட்டுப்போயுள்ளனர். எம்ஜிஆருக்குப் பிறகு சமூக அக்கறை உள்ள நடிகர்கள் இல்லை என்றார்.