அத்திக்கடவு - அவிநாசி, குடிமராமத்து உள்ளிட்ட பொதுப்பணித் துறை திட்டம் குறித்து முதல்வர் ஆய்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அத்திக்கடவு - அவிநாசி, குடிமராமத்து உள்ளிட்ட பொதுப்பணித் துறை திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆய்வு நடத்தினார்.

பொதுப்பணித் துறை மற்றும்நீர்வள ஆதாரத் துறை ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன், தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்ட இயக்குநர் விபு நய்யர், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல், நதிகள் சீரமைத்தல் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் கோ.சத்யகோபால், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர்கள் (கட்டிடம்) எம்.ராஜமோகன், (நீர்வள ஆதாரம்) கே.ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ‘தண்ணீரில் தன்னிறைவு.. தலைநிமிரும் தமிழகம்.. முதல்வரின் குடிமராமத்து திட்டம்’ என்ற சிறப்பு மலரை முதல்வர் வெளியிட, பொதுப்பணித் துறை செயலர் பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:இன்றைக்கு நீர்மேலாண்மை என்பது முக்கியமான ஒன்றாகும். அந்த நீர்மேலாண்மையை சிறப்பான வகையில் அரசு கையாள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தஆய்வுக் கூட்டம் நடக்கிறது. அரசுஅறிவித்த திட்டங்களில் எந்த அளவுக்கு பணி நடந்துள்ளது, மேற்கொண்டு நடக்கவுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல திட்டங்களுக்கான பணிகள் நடந்துவருகின்றன.

குறிப்பாக, குடிமராமத்து திட்டம்மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பருவகாலங்களில் பெய்யும் மழைநீர் முழுவதையும் சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டமாக குடிமராமத்து திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை மக்கள் இயக்கமாக உருவாக்கி, கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் ரூ.500 கோடியில் 1,829 ஏரிகள் குடிமராமத்துதிட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பல ஏரிகளின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சில இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்பது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே கனவுத் திட்டமாக இருந்தது. ஜெயலலிதா மறைந்த பின், அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதாக அறிவித்து பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், 3 ஆண்டுகால திட்டமாக ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தப் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. இதுபற்றியெல்லாம் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in