நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது நீதிமன்றம்: தனி அதிகாரி நியமன விவகாரத்தில் அரசு விளக்கம்

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது நீதிமன்றம்: தனி அதிகாரி நியமன விவகாரத்தில் அரசு விளக்கம்
Updated on
1 min read

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலை ரத்துசெய்யக் கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு மற்றும் விஷால் தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பாக நேற்று நடந்தது.

விஷால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் ஆஜராகி, ‘நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் 23 அன்று நடந்த தேர்தலில் 80சதவீத உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். பழைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்தாலும் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை பதவியில் நீடிக்கலாம். மேலும் நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' என வாதிட்டார்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, ‘பழைய நிர்வாகிகளின் பதவிக்காலம் காலாவதியாகிவிட்ட பிறகுஅவர்கள் பதவியில் நீடிக்க முடியாது. நிர்வாகிகளின் பதவிக்காலமே செல்லாது எனும்போதுஅவர்கள் நடத்திய தேர்தலும் செல்லாது.

மேலும் உறுப்பினர்களின் புகார்கள் குறித்து விசாரிக்கவும் தனி அதிகாரியை நியமிக்கவும் சங்கங்களின் பதிவாளருக்கு முழு அதிகாரம் உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் நடைமுறைகளில் அரசு தலையிடவில்லை’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்தவழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

மற்றொரு வழக்கு

இதேபோல நடிகர் சங்கத்துக்கு கீதா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் நடிகர் கார்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணையும் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பாக நேற்று நடந்தது. அப்போதுபதிவுத் துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில்,‘தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதியின்படி சங்கத்தின் பொதுச் செயலாளர் மட்டுமே வழக்கு தொடர முடியும். எனவே இதுதொடர்பாக நடிகர் சங்கத் தலைவராக பதவி வகித்த நாசர், பொருளாளராக பதவி வகித்த கார்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்பதால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸூக்கு அவர்கள் இதுதொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் விளக்கம் பெற்றபிறகே சிறப்பு அதிகாரியாக கீதா நியமிக்கப்பட்டுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in