

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த எல்.கே.சுதீஷ் தலைமையில் 5பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று தொடங்கி வைத்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
நூற்றுக்கணக்கான தேமுதிகவினர் விஜயகாந்திடம் இருந்துவிருப்ப மனுவை பெற்றுக்கொண்டனர். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வரும் 25-ம் தேதி மாலை5 மணிக்குள் மாவட்ட தலைமைஅலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுதீஷ் தலைமையில் குழு
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளது.
தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் அவைத் தலைவர் வி.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து செயல்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.