

வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாய அலுவலகத்தில், மின்னணு நீதிமன்றம் (இ-கோர்ட்) திறக்கப்பட்டுள்ளது.
வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தனது அன்றாட பணிகளின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தி, மின்னணு நீதிமன்றம் (டிஜிட்டல் கோர்ட்), அல்லது இ-கோர்ட்டாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்லி, மும்பை, நாக்பூர் மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த இ-கோர்ட் இணையவழி காணொலி காட்சி மூலம் (வீடியோ கான்பரன்சிங்) மூலம் செயல்படுகிறது.
இந்நிலையில், சென்னை பெசன்ட்நகர், ராஜாஜி பவனில் உள்ள வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாய அலுவலகத்தில், அதிநவீன இணையவழி காணொலிகாட்சி வசதியுடன் ஒரு புதிய நீதிமன்ற அறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு நீதிமன்றத்தை (இ-கோர்ட்) சென்னை வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் நீதியரசர் பி.பி.பட் நேற்று திறந்து வைத்தார். விழாவில், தீர்ப்பாயத்தின் துணைத் தலைவர் ஜி.எஸ்.பன்னு, என்.வி. வாசுதேவன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த திறப்பு விழாவில், தீர்ப்பாயத்தின் தலைவர் பி.பி.பட் பேசியதாவது: வருமானவரி தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது இந்த தீர்ப்பாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இந்த தீர்ப்பாயத்தில் இணையவழி வீடியோகான்பரன்சிங் வசதிகளுடன் புதிய மின்னணு நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வருமானவரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை மனுதாரர்கள் தங்களுடைய வழக்கறிஞர்கள் மூலம் அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலம் வாதாடலாம். இதன் மூலம், அவர்கள் சென்னைக்கு வரவேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கு பணமும், நேரமும் மிச்சமாகிறது. அத்துடன், தீர்ப்பாயத்தின் சேவை அவர்களுக்கு இருந்த இடத்திலேயே கிடைக்கிறது.
நாடு முழுவதும் வருமானவரி மேல்முறையீடு தொடர்பாக 9 ஆயிரம் வழக்குகளும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5,200 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவ்வாறு பட் கூறினார்.
விழாவில், தீர்ப்பாய உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.