

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கணவரைப் பிரிந்து வாழும் இவருக்கும் சென்னை, மீஞ்சூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(40) என்பவருக்கும் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
ஜெயச்சந்திரனும் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இருவரின் நட்பு, காதலாக மாறியுள்ளது. குமாரியை திருமணம் செய்வதாக கூறி அவரிடம் இருந்து நகைகள், பணம் பெற்றுக் கொண்டு, தற்போது திருமணத்துக்கு ஜெயச்சந்திரன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குமாரி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘ஜெயச்சந்திரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டார். மேலும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வைரக் கம்மல், லேப்-டாப்பை பெற்றுக் கொண்டு தர மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து ஜெயச்சந்திரனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.