இளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்: ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள்

இளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்: ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள்
Updated on
2 min read

மாணவியின் இழப்புக்கு எங்கள் நிர்வாகம் வருந்துகிறது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாராக இருக்கிறோம். அதே நேரம் ஊடகங்கள் மற்ற தரப்பினர் போலீஸ் விசாரணை முடியும் முன்னரே ஐஐடி நிர்வாகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வண்ணம் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என ஐஐடி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப்(19). இவர் சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். வளாகத்தில் சரயு பெண்கள் விடுதியில் தங்கியிருந்த அவர் கடந்த 8-ம் தேதி இரவு தனது அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஐஐடி நிர்வாகத்தின்கீழ் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் இந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்கள், மொத்தமாக எத்தனை பேர் இதுவரை தற்கொலை செய்துகொண்டனர் போன்ற புள்ளிவிவரங்களை வைத்து இந்த விவகாரம் பலதரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர், டிஜிபி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரைச் சந்தித்து மகள் மரணத்தில் நீதி விசாரணை கேட்டு பாத்திமாவின் தந்தை மனு அளித்துள்ளார்.

மாணவியின் தற்கொலை விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில் ஐஐடியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தச் செயலிலும் ஊடகம் உள்ளிட்ட யாரும் ஈடுபட வேண்டாம் என ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐஐடி நிர்வாகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஐஐடியின் அனைத்துத் தரப்பினரும் மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், மாணவியின் அகால மரணத்திற்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இதுபோன்று இன்னொரு சம்பவம் நிகழக்கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்கொலை சம்பவம் குறித்து அறிந்த அடுத்தகணம் ஐஐடி நிர்வாகம் காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தும், காவல்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பையும் அளித்தது. சென்னை ஐஐடி சட்டத்திற்குட்பட்டு நேர்மையான விசாரணை நடக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பும் தரத் தயாராக உள்ளது.

சமூக வலைதளங்களில் ஐஐடி, அதன் ஆசிரியர்கள், மாணவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். போலீஸாரின் விசாரணை முடிவடைவதற்கு முன்பே இவ்வாறு விமர்சிப்பது மாணவர்கள், பேராசிரியர்கள், ஐஐடி ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயலாகும். இந்தியாவின் முதல் தரமான ஐஐடியின் நற்பெயருக்குக் களங்கம் உருவாக்கும் செயலாகும்.

எங்கள் ஆசிரியர் பெருமக்கள் உயர் தரமான, ஒருமைப்பாடு மற்றும் நேர்மைக்காக அறியப்பட்டுள்ளார்கள். நம்பிக்கைக்குரிய இளம் மாணவியின் இழப்புக்கு நாங்கள் தொடர்ந்து எங்கள் கவலையைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் எங்களுடைய இளம் மாணவர்களின் மன, உடல் நலத்தைக் காக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்.

நாங்கள் போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் அனைவரையும் நாங்கள் கேட்டுக் கொள்வது, விசாரணை முடிவடையாத நிலையில் சம்பந்தப்பட்டவர்களை அல்லது ஐஐடி நிர்வாகம் குறித்து தவறான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in