சென்னை விமான நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நின்ற கார்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம்
Updated on
1 min read

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த காரால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் உள்ள மூன்றாவது வருகை வாயில் முக்கியப் பிரமுகர்கள் வரும் வழியாகும். இங்கு நேற்று மாலையில் இருந்து நோ பார்க்கிங்கில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பல முறை போலீஸார் கவனித்தும் இன்று மதியம் வரை யாரும் காரை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்ததால் காரில் வெடிகுண்டு எதுவும் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டைக் கண்டறியும் மோப்ப நாய் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டது. காரின் பின்புறக் கண்ணாடியை உடைத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.

காரில் வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லாததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். விமான நிலைய போலீஸார் காரின் பதிவு எண்ணை வைத்து சோதனை செய்ததில் காரின் உரிமையாளர் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த கலாவதி எனத் தெரியவந்தது.

அவர் ஏன் காரை அங்கு நிறுத்திவிட்டுச் சென்றார் என போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். கார் ஒன்று முக்கிய நுழைவு வாயில் அருகே கேட்பாரற்று நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in