69-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஜெயலலிதா - ‘இஸ்ரோ’ விஞ்ஞானி வளர்மதிக்கு அப்துல் கலாம் விருது

69-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஜெயலலிதா - ‘இஸ்ரோ’ விஞ்ஞானி வளர்மதிக்கு அப்துல் கலாம் விருது
Updated on
2 min read

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ‘இஸ்ரோ’ விஞ்ஞானி வளர்மதிக்கு அப்துல் கலாம் விருதையும் வழங்கினார்.

தமிழக அரசின் சார்பில் நாட்டின் 69-வது சுதந்திர தின விழா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா, காலை 8.25 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவரது காருக்கு முன்னால் மாநகர போக்குவரத்து போலீஸார் இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்தனர்.

கோட்டையில் முதல்வரை தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தென்பிராந்திய அதிகாரிகள், டிஜிபி அசோக்குமார், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை முதல்வருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பின், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

சரியாக காலை 8.40 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடையே சுதந்திர தின உரையாற்றினார்.

கொத்தளத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் அமர்ந்திருந்த ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

விழாவில், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விருதுகள்

தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு முதல் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ‘இஸ்ரோ’ திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கு ‘அப்துல் கலாம்’ விருதை முதல்வர் வழங்கினார். வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை ஈரோட்டைச் சேர்ந்த முதல் பெண் லாரி ஓட்டுநரான ஜோதிமணி பெற்றுக்கொண்டார்.

அம்மா உணவகங்கள், பொது சேவை மையங்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புனரமைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு முதல்வரின் நல்லாளுமை விருதுகள் வழங் கப்பட்டன. அவற்றை அந்தந்த துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய சிறந்த மருத்துவருக்கான விருது சென்னையைச் சேர்ந்த எஸ்.சம்பத்குமாருக்கும் சிறந்த சமூக சேவகருக்கான விருது பி.சிம்மச்சந்திரனுக்கும், சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கான விருது, நெல்லை மாவட்டம் சோஷியல் சேஞ்ச் அண்டு டெவலப்மென்ட் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னை இல்லத்துக்கும் வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கான விருதை காஞ்சிபுரம் மாவட்டம் பிளக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி நிறுவனம் பெற்றது. சிறப்பாக செயல்பட்ட சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக தஞ்சை மாவட்டம் திருவையாறு ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆதரவற் றோர் இல்லத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த சமூக பணியாளர் விருது, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சிவகாமவள்ளிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சி

சிறந்த மாநகராட்சிக்கான விருதை மதுரை மேயர் ராஜன் செல்லப்பா பெற்றுக்கொண்டார்.

சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு புதுக்கோட்டைக்கும், 2-ம் பரிசு மன்னார்குடிக்கும் 3-ம் பரிசு கோபிசெட்டிபாளையத்துக்கும் வழங்கப்பட்டன. சிறந்த பேரூராட்சிக்கான பரிசுகள் தரங்கம்பாடி, திருவையாறு, சிறுகமணி பேரூராட்சிகளுக்கு வழங்கப்பட்டது.

இளைஞர் விருது

முதல்வரின் மாநில இளைஞர் விருதை பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.அன்னகாமுவும் ஆண்கள் பிரிவில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பி.மணிமாறன், விருதுநகரைச் சேர்ந்த டெனித் ஆதித்யா ஆகியோருக்கு ஜெயலலிதா வழங்கினார். பின்னர் விருது பெற்றவர்களுடன் முதல்வர் ஜெயலலிதா குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சுதந்திர தின விழா துளிகள்..

* சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா காலை 8.50 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் கொடியேற்று வார் என கூறப்பட்டிருந்தது. இருப்பினும் 10 நிமிடங்கள் முன்னதாகவே அவர் கொடியேற்றி வைத்தார்.

* கோட்டை கொத்தளத்துக்கு முதல்வர் வருவதற்கு வசதி யாக பிரத்யேக மின்தூக்கி அமைக்கப்பட்டிருந்தது.

* முதல்வர் கொடியேற்றி முடித் ததும், 10 நிமிடங்கள் இருக்கை யில் அமர்ந்தபடியே சுதந்திர தின உரையாற்றினார்.

* ஆதரவற்றோர் இல்லங்களை சேர்ந்த குழந்தைளுக்கு முதல் வர் இனிப்பு வழங்கும்போது, அவர்களை உற்சாகப்படுத்தி, கைகுலுக்கி வாழ்த்து தெரி வித்தார்.

* நிகழ்ச்சி முடிந்து முதல்வர் வீட்டுக்கு புறப்பட்டதும், கோட்டை வாயிலில் உள்ள நாகாத்தம்மன் கோயில் பூசாரி தீபாராதனையுடன் காத்திருந் தார். வாகனத்தை நிறுத்தி, அம்மனை வணங்கிய பிறகு முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.

* சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி, எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு ஒதுக்கப் பட்ட பகுதியில் அமர்ந்திருந் தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in