

தேனி
ஐயப்பன் கோயில் விரத காலம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக நாளை மறுநாள் (நவ.17) மாலை நடைதிறக்கப்பட உள்ளது. மறுநாள் முதல் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
சபரிமலை கோயிலின் பிரசித்தி பெற்ற நிகழ்வு என்பதால் கார்த்திகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க வருவது வழக்கம்.
வரும் 17ம் தேதி கார்த்திகை மாதம் துவங்குகிறது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே பலரும் மாலை அணிந்து விரதத்தை துவக்கி உள்ளனர். நடை திறப்பு அல்லது முதல்வாரத்தில் சபரிமலை செல்ல திட்டமிட்டு அவர்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி குயவர்பாளையம் அருள்மிகு ஐயப்பன் திருக்கோயிலில் மாலை அணிய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கார்த்திகை முதல் இக்கோயிலில் தினமும் அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமும் இரவு 7 முதல் 8 மணி வரை பஜனையும் நடைபெறும்.
ஐயப்பன் கோயில் விரத காலம் தொடங்க உள்ளதைத் தொடர்ந்து சந்தையில் துளசிமாலை, காவி, கருப்பு, பச்சை வேட்டி, துண்டுகள் ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக உள்ளது. மேலும் ஐயப்பன் புகைப்படம், ஆடியோ பாடல்களும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
இது குறித்து ஐயப்ப பக்தரான குருசாமி எஸ்பிஎஸ்.ரவி கூறுகையில், கார்த்திகை தொடங்க சில தினங்களே உள்ளதால் வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
பாதயாத்திரை, இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் இங்கு தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பஜனை, காலை, மாலை வழிபாடுகளும் நடத்தப்படும் என்றார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவாரி தாலுகா நிலந்திரிபூரம் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த மாதம் 23ம் தேதி கிளம்பிய இவர்கள் இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே கடந்து சென்றனர்.
இதே போல் பல பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை துவங்கியுள்ளதால் தமிழக கேரளா எல்லைப்பகுதியான குமுளி களைகட்டி வருகிறது.