

காரைக்குடி
சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக கூறிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், ராமருக்காக 400 ஆண்டுகள் பொறுத்தோம்; ஐயப்பனுக்காக 2 ஆண்டுகள் பொறுக்கமாட்டோமா? என்று பேசினார்.
காரைக்குடியில் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.
மத நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதை 7 நபர் கொண்ட அமர்வுக்குதானே மாற்றியுள்ளார்கள்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யாமல், இதைவிட கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத்தான் மாற்றியிருக்கிறார்கள் என்ற நிலை வருத்தமளிக்கிறது.
அயோத்தியில் ராமருக்கு கோயில் அமைவதற்காக 400 ஆண்டு காலம் காத்திருந்த நாங்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாங்கள் கடைபிடிக்கும் பழக்கத்திற்கு நீதி கிடைக்க இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் நிச்சயம் காத்திருப்போம்.
சபரிமலை விஷயத்தைப் பொறுத்தவரை எனக்கு பக்தி இருக்கிறது, விரதம் இருக்கத் தயாராக இருக்கிறேன், ஆனாலும் எங்களை அனுமதிக்கவில்லை என்ற ஆதங்கம் கொண்ட பெண் இருந்திருந்தால் நீதிமன்றம் அவர்களைக் குறிப்பிட்டு இத்தீர்ப்பினை வழங்கியிருக்கலாம்.
ஆனால், உண்மையான பக்தியுள்ள குடும்த்தைச் சேர்ந்த பெண்கள் விதிமுறைகளை மீற விரும்பவில்லை. ஏதோ ஒரு சில பெண்கள் வேண்டும் என்றே பிரச்சினையைக் கிளப்ப வேண்டும் என்று செயல்படுகிறார்கள் என்பது எங்களின் பகிரங்க குற்றச்சாட்டு.
நாங்கள் நூற்றாண்டு காலமாக கடைபிடிக்கும் பழக்கத்திற்கு வந்த சோதனைக்கு நல்ல முடிவு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.