

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு இன்று (நவ.15) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனுக்களை வழங்கினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"உள்ளாட்சித் தேர்தலில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அரசு எவ்வாறு செய்திருக்கிறது என மக்கள் பார்ப்பார்கள். சாலைகள், மழைநீர் சேமிப்பு வசதிகள், கழிவுகள் மேலாண்மை, தங்கு தடையற்ற மின்சாரம், இப்படி பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தமிழகம் முழுவதும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரையில் அமைதிப் பூங்கா என்று சொல்லும் வகையில் சாதி, மத, இன, மொழி சண்டையில்லாமல் அனைவரும் ஒருமித்த சகோதரர்களாக வாழும் மாநிலம் தமிழ்நாடு. எனவேதான், பெரும்பாலானோர் தமிழகத்தில் தொழில் செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இந்த விஷயங்கள் உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலிக்கும்.
சட்டம்- ஒழுங்கு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் அரசு, தமிழக மக்களின் எண்ணங்களை 100% பூர்த்தி செய்திருப்பதால், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுக மிரட்சியுடன் இருக்கிறது. நிர்வாக ரீதியில் அதிகாரிகள் மாறுதல் என்பது சகஜம். பலம் இருந்தால் பயப்படத் தேவையில்லை. நீச்சல் தெரிந்தவர்களுக்கு கடல் ஆழத்தைப் பற்றி கவலை இருக்காது. அது போன்றுதான் அதிமுகவுக்கும் பயம் இல்லை".
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.