

சென்னையில் 232 ஆண்டு பழமையான ‘மோனேகர் சவுல்ட்ரி’ முதியோர் இல்லத்தை சென்னை மாநகராட்சி தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ள உள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அருகில் உள்ளது மோனேகர் சவுல்ட்ரி என்ற முதியோர் இல்லம். இது 1782-ம் ஆண்டில் கட்டப்பட்டது. கிராமத்து மணியக்காரர் ஆரம்பித்தது என்பதால் ‘மணியக்கார் சாவடி’ (சத்திரம்) என்று அழைக்கப்பட்டது. அந்த பெயர் மருவி, ‘மோனேகர்’ ஆகிவிட்டது. பின்னர், ராஜா வெங்கடகிரியால் இந்த இல்லம் பராமரிக்கப்பட்டது.
கஞ்சித் தொட்டியாக இருந்த இடம்
ஆதரவற்றோருக்கு ஒரு வேளை கஞ்சி ஊற்றும் கஞ்சித் தொட்டியாக இருந்த இடம் பின்பு முதியோர் இல்லமாக உருவெடுத்துள்ளது. பலரது நன்கொடைகளாலேயே இந்த இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் நிர்வாகக் குழுவில் சென்னை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், ஸ்டான்லி மருத்துவமனையின் பிரதிநிதிகள் இருந்து வருகின்றனர்.
நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த முதியோர் இல்லத்தை சென்னை மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு நிர்வகிக்க உள்ளது. சமீபத்தில் ரிப்பன் மாளிகையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியின் கீழ் 30 இல்லங்கள் ஆதரவற்றோருக்காக இயங்குகின்றன. இவை ஒவ்வொன்றையும் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது. அதற்கான ஆண்டு செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு இல்லத்துக்கும் ஓராண்டுக்கு சுமார் ரூ.13.95 லட்சம் செலவிடப்படுகிறது.
மோனேகர் சவுல்ட்ரியில் இருப்பவர்களுக்கு மாநகராட்சியில் இருந்து உதவித் தொகையாக ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.40 கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது மாநகராட்சியே இந்த இல்லத்தை எடுத்துக்கொள்வதால், இதற்கும் மற்ற இல்லங்களைப் போல ஆண்டுக்கு ரூ.13.95 லட்சம் நிதி கிடைக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
ஆதரவற்ற முதியோருக்கு அனுமதி
மோனேகர் சவுல்ட்ரியை கடந்த 33 ஆண்டுகளாகப் பராமரித்துவரும் ஆர்.பவானி கூறுகையில், ‘‘32 பெண்கள், 23 ஆண்கள் என இங்கு 55 பேர் உள்ளனர். 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களை ஆதரிக்க யாரும் இல்லை என்று தங்களது வார்டு கவுன்சிலரிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் மட்டுமே இங்கு அனுமதியுண்டு.
இங்கு உள்ளவர்களுக்கு 3 வேளை உணவு இங்கேயே சமைத்து தரப்படுகிறது. அவர்களுக்கான அனைத்து தேவைகளும் நன்கொடைகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. சாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் இங்கு அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்’’ என்றார்.