

சேலையூர் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற மூன்று இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில் வசித்தவர் பிரசாந்த் (20). சேலையூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், இளநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த, ஜெகநாதன் (18) மற்றும் அகரம் தென், கோகுலம் நகரைச் சேர்ந்த தினேஷ்(18) ஆகிய இருவரும் பிரசாந்தின் நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் நேற்று மாலை பிரசாந்துடன் சேர்ந்து, அவரது இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றனர். சேலையூர் நோக்கி சேலையூர்-அகரம் தென் சாலையில் அவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். மூவரும் ஹெல்மட் அணியவில்லை. சேலையூருக்கு முன் எம்.ஜி.ஆர்., நகர் அருகே வந்தபோது அதிவேகம், அதிக பாரம் காரணமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியது.
இதில், பேருந்தில் சிக்கி பல அடிதூரம் உடல் நசுங்கிய நிலையில் மூவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய பிரசாந்த் மற்றும் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜெகநாதன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார், பேருந்து ஓட்டுநரான ஏழுமலையைக் கைது செய்தனர். இவர் காஞ்சிபுரம் மாவட்டம், நல்லம்பாக்கத்தைச் சேர்ந்தவர்.
இப்பகுதியில் வட மாநிலத்தவர் அதிக அளவில் கஞ்சா விற்பதாகவும், அதை வாங்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரத்து அதிகமாக உள்ளதாகவும், கஞ்சா போதையில் இளைஞர்கள் தாறுமாறாக வாகனத்தைச் செலுத்துதால் இங்கு அடிக்கடி விபத்து நிகழ்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.