அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் கார்களை நிறுத்துவதற்கான சோதனை ஓட்டம் தொடக்கம்

அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் கார்களை நிறுத்துவதற்கான சோதனை ஓட்டம் தொடக்கம்
Updated on
1 min read

சென்னையில் தொடங்கப் படவுள்ள முதல் அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் சோதனை முறையில் கார்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் அந்த வாகன நிறுத் தம் பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிரீம்ஸ் சாலையை ஒட்டிய வாலஸ் தோட்டம் சாலையில், அப்போலோ மருத்துவமனைக்கு எதிரில் ஏழு அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கடந்த மூன்று வருடங்களாக கட்டப்பட்டு வந்தது.

இதில் 330 கார்களையும், 220 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்த இடம் உள்ளது. இங்கு வரும் வாகனங்களுக்கு டோக்கன் அளித்து கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு சுமார் ரூ.30, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 வசூலிக்கப்படும். சுமார் 10 கிரவுண்ட் இடத்தில் இந்த வாகன நிறுத்துமிடத்தை அப்போலோ மருத்துவமனை மற்றும் மார்க் ஆக்சிஸ் நிறுவனம் இணைந்து கட்டி வருகின்றன. கட்டி முடித்த பிறகு இதிலிருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை மாநகராட்சிக்கு இவர்கள் அளிக்க வேண்டும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான சோதனை ஓட்டம் முடிந்து விட்டது. தற்போது கார்களை நிறுத்து வதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

இன்னும் சில நாட்களில் வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.

இதேபோன்று நுங்கம்பாக்கம் வாகன நிறுத்துமிடத்துக்கான ஆய்வறிக்கை இறுதி செய்யப் பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலையில் சங்கீதா உணவகத் துக்கு எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்போது லாரி பணிமனை உள்ளது. அங்கு சுழற்சி முறையில் (ராட்டினம் இயங்குவது போல) வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் பிராட்வே பேருந்து நிலையம் அருகிலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்தில் ஆகாய நடைபாதை அமையவிருப்பதால், அதனுடன் ஒருங்கிணைந்து வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in