Published : 15 Nov 2019 09:43 AM
Last Updated : 15 Nov 2019 09:43 AM

உள்ளாட்சி தேர்தலுக்காக திமுகவில் விருப்ப மனு தொடங்கியது: சென்னை மேயருக்கு உதயநிதி போட்டியிட மனு

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து விருப்பு மனு பெறுவது நேற்று தொடங்கியது. சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக இளைஞரணி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட விரும்பும் திமுகவினர் நவ.14 முதல் 20-ம் தேதி வரை கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். விருப்ப மனுவுடன் மாநகராட்சி மேயருக்கு ரூ.50 ஆயிரம், மாநகராட்சி மன்ற உறுப்பினர், பேரூராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு ரூ.10 ஆயிரம், நகராட்சித் தலைவருக்கு ரூ.25 ஆயிரம், நகராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினருக்கு ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் போட்டியிடுவோர் விருப்ப மனுவுடன் பாதிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் விருப்ப மனு பெறும் பணி நேற்று தொடங்கியது. சென்னையில் திமுக கட்சி ரீதியான சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 மாவட்டங்களிலும் மாநகராட்சி மேயர், மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட நூற்றுக்கணக்கானோர் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் விருப்ப மனு அளித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு மனு அளித்தார். உதயநிதிக்காக மேலும் பலரும் விருப்ப மனு அளித்துள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x