Published : 15 Nov 2019 08:19 AM
Last Updated : 15 Nov 2019 08:19 AM

தரமணி தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை மீது வழக்கு

சென்னை

தரமணியில் 2-ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதாக தனியார் பள்ளி ஆசிரியை மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை தரமணியில், புனித பிரான்சிஸ் சேவியோ என்ற தனியார் மெட்ரிக் பள்ளியில் லோகேஷ் (7) என்ற மாணவன் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் லோகேஷை பள்ளி ஆசிரியை கமலா என்பவர், தான் வைத்திருந்த இரும்பு ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், லோகேஷ் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத பள்ளி நிர்வாகத்தினர், அருகில் உள்ள மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பள்ளி முடிந்து தலையில் கட்டுடன் வீடு திரும்பிய லோகேஷை பார்த்த பெற்றோர், அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு மாணவன் தலையில் 3 தையல் போடப்பட்டது. கோபமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று கேட்டபோது, பெற்றோரிடம் இந்த ஆண்டு கல்விக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்றும், மருத்துவ செலவுக்கு ரூ.5 ஆயிரம் தருவதாகவும் இந்த விவகாரத்தை இத்தோடு விட்டு விடுங்கள் எனவும் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், மேலும் கோபம் அடைந்த மாணவனின் பெற்றோர் மகன் தாக்கப்பட்டது குறித்து தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, போலீஸார் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை கமலா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகன் தாக்கப்பட்டது குறித்து மாணவனின் தந்தை ஸ்டாலின் கூறும்போது, "கல்விக் கட்டணம் செலுத்துவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. இதனால், கோபம் அடைந்த பள்ளி ஆசிரியர் மகனைத் தாக்கியுள்ளார். கல்விக் கட்டணத் தில் நாங்கள் பாக்கி வைத்த காரணத்தால்தான் மகன் தாக்கப் பட்டுள்ளார். எனவே மகனை தாக்கிய ஆசிரியை மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பள்ளி நிர்வாகத்தினர் கூறும் போது, "கல்விக் கட்டணத்தை மாணவனின் பெற்றோர் முறையாக செலுத்துவதில்லை. தற்போது பணம் கேட்டு பேரம் பேசுகின்ற னர். கொடுக்க மறுத்ததால் பள்ளியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவதூறு பரப்பு கின்றனர்" என்றனர். இந்த விவகாரம் குறித்து தரமணி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x