

வனத்துறையின் 4 மருத்துவக் குழுவினர் முகாமிட்டு 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்களின் உதவியுடன் இரவு பகலாக 5 நாட்கள் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நேற்று நள்ளிரவில் 'அரிசி ராஜா' என்னும் காட்டு யானை வனத்துறையிடம் அகப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாரிபாளையம் பகுதியில் 'அரிசி ராஜா' என அழைக்கப்பட்டு வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவித்து வந்ததுடன், 8 மனித உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்தது.
அரிசி ராஜா யானையைப் பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த 9-ம் தேதி இரவு முதல், 'அரிசி ராஜாவை' பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், 4 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் யானையைப் பிடிக்கும் பணியில் 5 நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுக்குத் துணையாக கும்கி யானைகள் கலீம் மற்றும் பாரி ஆகியன அர்த்தனாரிபாளையம் பெருமாள் மலை அடிவாரத்துக்குக் கொண்டு வரப்பட்டன. வனத்துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து மலை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டு யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
கும்கி யானைகளின் வாசனையை மோப்பம் பிடித்த, 'அரிசி ராஜா' யானை, வனத்துறையினர் திட்டமிட்டிருந்த கனவாகாடு, பெருமாள் மலை அடிவாரம், நொச்சிப்பள்ளம் பகுதிக்கு வருவதைத் தவிர்த்து, தனது நடமாட்டத்தை, வனத்துறையின் முகாமில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஆண்டியூர் வனப்பகுதியில் சூரி காடு என்னும் இடத்துக்கு மாற்றியது.
'காட்டு ராஜா' கலீம்
கடந்த 12-ம் தேதி அங்குள்ள வாழைத் தோட்டத்தில் புகுந்தது. யானையின் நடமாட்டத்தைக் கண்டறிந்த வனத்துறையினர் நேற்று (நவ.13) நள்ளிரவு வெள்ளை விநாயகர் கோயில் பாறை பகுதிகளில் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து மருத்துவக் குழுவினருடன் முகாமிட்டு, யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.
நள்ளிரவு 12.45 மணிக்கு வாழைத் தோட்டத்தில் புகுந்த 'அரிசி ராஜா' யானை மீது வனத்துறையினர், துப்பாக்கி மூலம் மயக்க ஊசியைச் செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட உடன் சுமார் 100 மீட்டர் தூரம் ஓடிய யானை அங்குள்ள அகழியில் இறங்கியது. பின்னர் அங்கேயே நின்றுவிட்டது.
இதையடுத்து கும்கி யானை 'கலீம்' உதவியுடன் காட்டு யானை வெளியே இழுத்து வரப்பட்டது. அப்போது ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட 'அரிசி ராஜா' யானை தனது தந்தத்தால் 'கலீம்' யானையைத் தாக்கியது. இதில் 'கலீம்' யானைக்கு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டது. 'கலீம்' தனது தந்தத்தால் காட்டு யானையைக் குத்தி ஒரே தூக்காக தூக்கிக் கீழே விட்டது. துணைக்கு 'கபில்தேவ்' என்ற கும்கி இணைந்து கொள்ள 'அரிசி ராஜா' யானை இரு கும்கி யானைகளுக்கு இடையில் அகப்பட்டது.
பின்னர் கயிறு கட்டி லாரிக்கு இழுத்து வரப்பட்டது. லாரியில் ஏற மறுத்த 'அரிசி ராஜா'வை மீண்டும் தனது தந்தத்தால் 'கலீம்' தாக்கியது. இதையடுத்து 'அரிசி ராஜா' யானை லாரியில் ஏறியது.
பொதுமக்களை நோக்கி தும்பிக்கையை உயர்த்தி காட்டிய 'கலீம்'
கூடியிருந்த பொதுமக்கள் கைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீண்டும் ஒருமுறை மயக்க மருந்து செலுத்தப்பட்ட 'அரிசி ராஜா' டாப் சிலிப்பில் உள்ள வரகளியாறு மர கூண்டில் அடைப்பதற்காக வனத்துறையினர் லாரியில் கொண்டு சென்றனர். கடந்த 5 நாட்களாக இரவு பகல் பாராமல் உணவு, உறக்கம் இல்லாமல் உழைத்து யானையைப் பிடித்த வனத்துறையினருக்கு அர்த்தனாரி பாளையம் ஆண்டியூர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.