

ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேங்கி நிற்கும் மழை நீரில் துணிகளை சலவை செய்து நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
ராமேசுவரத்தை அடுத்த தென்குடா கிராமத்தில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் பாதையைக் கடந்து செல்ல கடந்த ஆண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
சமீபத்தில் பெய்த மழையினால் சுரங்கப்பாதையில் 5 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தென்குடா கிராம மக்களும் அந்த பகுதியில் உள்ள கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ரயில்வே நிர்வாகமும், தங்கச்சிமடம் ஊராட்சியும் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த வலியுறுத்தி வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேங்கியுள்ள மழைநீரில் துணி துவைக்கும் நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு சிபிஐ தாலுகா செயலாளர் சே.முருகானந்தம் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாக கவுன்சில் உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல், தாலுகா துணைச்செயலாளர் காளிதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் வடகொரியா, நகர செயலாளர் நந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மற்றும் கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
எஸ். முஹம்மது ராஃபி