Published : 14 Nov 2019 03:54 PM
Last Updated : 14 Nov 2019 03:54 PM

முதலில் ரூ.15 லட்சம் பறிப்பு; பேராசையால் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: பிரபல நகைக்கடையில் அராஜகம் செய்த கும்பல் கூண்டோடு கைது

தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் முதலில் ரூ.15 லட்சம் மிரட்டி பறித்துச் சென்ற கும்பல் பின்னர் சில நாட்கள் கழித்து வந்து 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலி பத்திரிகையாளர், வழக்கறிஞர்கள் அடங்கிய கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் பிரபல நிறுவனத்துக்குச் சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு நேற்று மாலை 5 மணி அளவில் 15 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்துள்ளது. உரிமையாளரைப் பார்க்கவேண்டும் என்று கூறி அந்தக் கும்பல் உள்ளே சென்றுது.

உள்ளே சென்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் உரிமையாளரிடம் நாங்கள் பத்திரிகையாளர்கள் சங்கம், வழக்கறிஞர்கள், போலீஸ் என்றெல்லாம் கூறி மிரட்டியுள்ளனர். போலி நகைகளை விற்பனை செய்துள்ளீர்கள். இந்தப் பிரச்சினையை மீடியாவில் கொண்டு வந்து கடையின் பெயரை கெடுக்காமல் இருக்க ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அந்தக் கும்பலில் இருந்த தனசேகர் என்பவர் ஏற்கெனவே மிரட்டி ரூ.15 லட்சம் பெற்றுச் சென்றதால், இனியும் இதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று நகைக்கடையின் உரிமையாளர் முடிவெடுத்தார். அவர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே உடனடியாக தி.நகர் துணை ஆணையருக்கு நேரடியாகப் புகார் அளித்தார். உடனடியாக அங்கு வந்த தனிப்படை போலீஸார் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை வளைத்துப் பிடித்தனர்.

போலீஸார் வருவதைப் பார்த்து 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட, மீதமுள்ள 9 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கும்பலின் தலைவன் திருவேற்காடு சுந்தர சோழபுரத்தைச் சேர்ந்த தனசேகர் (27) என்பவர் கடந்த 3-ம் தேதி பழைய தங்க நாணயங்களைக் கொடுத்து 3 சவரன் செயின் வாங்கியுள்ளார். அதை எடுத்துச் சென்று கழிவறையில் வைத்து சில ரசாயனங்களை ஊற்றி நகை உதிரி உதிரியாக மாறியவுடன் உடனடியாக சத்தம் போட்டபடி கடையின் மேலாளரை மிரட்டியுள்ளார்.

''என்ன நகை விற்கிறீர்கள். போலி நகைகளை விற்கிறீர்களா? நான் யார் தெரியுமா? யூனிவர்சல் பிரஸ் மீடியா சங்கத் தலைவர், பத்திரிகையாளர் சங்கத் தலைவர். நான் இப்ப கூப்பிட்டா ஊரில் உள்ள மீடியா எல்லோரும் கேமராவுடன் வரிசை கட்டி உங்கள் கடை வாசலில் நிற்பார்கள்.

அப்படியே அனைத்து மீடியாக்களிலும் போலி நகை விற்கிறாய் என்று லைவ்ல போடச்சொல்லி உன் கடையை இழுத்து மூட வைப்பேன்'' என்று தனசேகர் மிரட்டியுள்ளார்.

முகூர்த்த நேரம். கடையில் கூட்டம் அதிகம் இருந்ததால் கடை உரிமையாளர், ''பேசித் தீர்த்துக்குவோம் வாங்க. உங்களுக்கு வேறு நகையைக் கொடுக்கச் சொல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

''என்னது நகையா, நீங்க செய்த வேலைக்கு நான் அமைதியாகப் போக வேண்டும் என்றால் ரூ.15 லட்சம் தரவேண்டும்’’ என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து எதற்கு வம்பு என்று ரூ.15 லட்சத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார் உரிமையாளர். இதையடுத்து தங்கள் நண்பர்களிடம் இதை தனசேகர் கூறியுள்ளார்.

கடை உரிமையாளரிடம் கூடுதலாகப் பணம் கேட்டு வாங்குவோம் என முடிவு செய்த தனசேகர், வழக்கறிஞர்கள் பலருடன் சொகுசுக் கார்களில் 15 பேர் வெள்ளைச் சட்டை அணிந்துகொண்டு கடைக்கு வந்துள்ளனர். ஒரு காரில் ஆளுங்கட்சி கொடி, பிரஸ், வக்கீல் ஸ்டிக்கரும், இன்னொரு காரில் பிரஸ் - ஊடகம் என்று போட்ட ஸ்டிக்கரும் இருந்தது.

தனசேகர் மற்றும் கூட்டாளிகள்

வந்தவர்கள் நேராக முதலாளி இருக்கும் அறைக்குச் சென்று மிரட்டியுள்ளனர். கையில் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்துள்ளனர். ''அன்றே ரூ.15 லட்சம் கொடுத்துள்ளேன் அப்புறம் மறுபடியும் மறுபடியும் வந்து கேட்டால் எப்படி?'' என்று உரிமையாளர் கேட்டுள்ளார். ''உன் கடை தி.நகரில் இருக்காது. நாங்கள் அவ்வளவு செல்வாக்கானவர்கள்'' என அவர்கள் மிரட்டியுள்ளனர்.

தனசேகர் தான் சில விவிஐபிக்களுடன் இருக்கும் புகைப்படத்தை உரிமையாளரிடம் காட்டியுள்ளார். அதைப் பார்த்த அவர் மிரண்டுபோய் இந்தப் பிரச்சினையைப் பணம் கொடுத்து தீராது என முடிவு செய்து நேராக தி.நகர் துணை ஆணையருக்கு போன் செய்து நடந்ததை விரிவாகக் கூறியுள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் வெளிவந்தது. கைதானவர்கள் தனசேகர் தவிர , அவரது நண்பர்கள் புதுப்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சையது அபுதாஹீர் (49) , எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் (25), புதுப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமானுல்லா (39), கீழ்ப்பாக்கம் செகரடேரியட் காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராம் (27), கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் என்கிற பாஸ் முருகன் (40), வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவா (47), திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமால் (47) மற்றும் கார் ஓட்டுநர் பல்லாவரத்தைச் சேர்ந்த தண்டபாணி (24) ஆகியோர் ஆவர்.

மேலும், தனசேகரன் என்பவர் பத்திரிகையாளர் போர்வையில் சங்கம் நடத்துவதும், போலீஸ் அதிகாரி போல் கார்டு அடித்து வைத்திருந்ததும், போலி போலீஸ் ஐடி கார்டு வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து மகேந்திரா எக்யூவி சொகுசுக் கார், மாருதி ஸ்விப்ட் கார் , ஒரு ஏர்கன், ஒரு துப்பாக்கி, கத்திகளை போலீஸார் கைப்பற்றினர்.

தனசேகர் மீது வேறு எங்காவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? பிஎச்டி என்று போட்டுள்ளது ஒரிஜினலா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

நகைக்கடை உரிமையாளர் சிவ அருள்துரை அளித்த புகாரின்பேரில் கைதான 9 பேர்மீதும் ஐபிசி பிரிவு 506(2) (ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல்), ஆயுதத்தடைச்சட்டம், 393 (கும்பலாக கொள்ளையடிக்க முயற்சி), 147(கலகம் செய்தல்) 148(பயங்கர ஆயுதங்களுடன் ஒன்றுகூடி கலகம் செய்தல்), 149(சட்டவிரோத கும்பல், தனித்தனியாக தண்டிக்கும் பிரிவு) ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடியவர்களை பிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போலிப் பத்திரிகையாளர்கள், பத்திரிகை சங்கங்கள் புற்றீசல் போல் அதிகரித்து வருகின்றனர். பிரஸ் ஸ்டிக்கரை தவறாகப் பலரும் பயன்படுத்துவதைக் காவல் ஆணையர் தலையிட்டு வாகனச் சோதனையில் இதையும் முக்கியப் பொருளாக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x