

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப், ஜூலை, 2019 முதல் சென்னை ஐஐடியில் படித்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 9-ம் தேதி, தன் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (நவ.14) இந்த வழக்கு சம்பந்தமாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை ஐஐடி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், இந்த வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், மாணவி தற்கொலை குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலையில் பேராசிரியர்களுக்கு உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 14 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கான காரணங்களைக் கண்டறிந்து களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.