Published : 14 Nov 2019 02:07 PM
Last Updated : 14 Nov 2019 02:07 PM
தூத்துக்குடி
உள்ளாட்சித் தேர்தல் சந்தேகங்களில் அதிகாரிகள் தெளிவுபெற்றால் தேர்தலை நேர்மையாக நடத்தலாம் என மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை டிசம்பரில் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது. இதில் எந்தெந்த தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர்கள் பங்கேற்ற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமியின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி பேசுகையில், "இந்த ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி எந்த அளவுக்கு உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி உள்ளார் என்பதை உறுதிப்படுத்துவது.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை புதிதாக நாம் எந்த வாக்காளர் பட்டியலையும் கையாளப் போவதில்லை. ஏற்கெனவே இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலைத்தான் பயன்படுத்த உள்ளோம்.
அதில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், இடம்பெயர்தல் உள்ளிட்டவை இடம்பெற்றால் அது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மாற்றம் செய்யப்படும்.
கூட்டத்தின்போது எந்த சந்தேகமாக இருந்தாலும் அதை கேட்கவேண்டும். சிறியது பெரியது என எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயமாக நேர்மையான, தெளிவான தேர்தலை நாம் நடத்த முடியும். உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற தேர்தலை போல் கிடையாது.
வார்டு பகுதிகளுக்கு மட்டுமே 1 லட்சத்து 6 ஆயிரத்து 450க்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதுதவிர கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர்களை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் காலியாக இடங்களுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுவார்கள். இவர்கள் அனைவரையும் திறம்பட கையாண்டு தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உள்ளது" என்றார்.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி, ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.