Last Updated : 14 Nov, 2019 12:29 PM

 

Published : 14 Nov 2019 12:29 PM
Last Updated : 14 Nov 2019 12:29 PM

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவருடைய மனைவி, சகோதரிக்கு உயர் நீதிமன்றம் பரோல்

மதுரை

கேரள போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரது மனைவி மற்றும் சகோதரிக்கு பரோல் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் இன்று (நவ.14) முதல் 3 நாட்களுக்கு பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிறு மாலை சிறைக்கு திரும்ப வேண்டும் ஆணையிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த செல்ல அன்பரசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்," கடந்த 29-ம் தேதி கேரளாவின் அகலி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார், என மாலை 06.30 மணி அளவில் எனக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.

இறந்தவர் மணிவாசகம் தான் என்பதை உறுதி செய்ய தூரத்து உறவினர்களை காவல் துறையினர் அழைத்துள்ளனர். அவரது மனைவியே அவரை அடையாளம் காண தகுதியானவர். கேரள காவல்துறையினரால் மணிவாசகம் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இந்நிலையில் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க கோரியும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே மனிதநேயத்தின் அடிப்படையில், மணிவாசகத்தின் உடலை அடையாளம் கண்டு உறதி செய்யவும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கவும் மணிவாசகத்தின் மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோருக்கு 30 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். அவரது இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று(நவ.14) நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொணரப்பட்ட நிலையில், இருவருக்கும் பரோல் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இருவருக்கும் 3 நாட்கள் பரோல் வழங்கியும், ஞாயிறு மாலை இருவரும் சிறைக்குத் திரும்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x