Last Updated : 14 Nov, 2019 11:46 AM

 

Published : 14 Nov 2019 11:46 AM
Last Updated : 14 Nov 2019 11:46 AM

பாஜக என்ன ஆகாத கட்சியா; அவர்கள் சொல்வதை கேட்கக் கூடாதா?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்

"பாஜக என்ன ஆகாத கட்சியா; அவர்கள் சொன்னா கேட்கக் கூடாதா?" என்று பேசியுள்ளார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரூ.1.05 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆவின் பால் பாக்கெட்டுகளில் முதல்வரின் ஒப்புதலைப் பெற்று இன்னும் 15 நாட்களில் திருக்குறளை அச்சிட்டு விநியோகிக்க உள்ளோம். திருவள்ளுவரின் படத்தையும் இடம்பெறச் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் திருக்குறளை மாற்றி அச்சிடுவோம்.

பாஜகவின் கோரிக்கையை ஏற்று செய்வதாக விமர்சனங்கள் வருவதாகச் சொல்கிறீர்கள். பாஜக என்ன ஆகாத கட்சியா? நல்ல விஷயங்களை அவர்கள் சொன்னால் கேட்கக்கூடாதா? பாஜக மத்தியில் ஆளும் கட்சி. அவர்கள் சொன்ன கருத்து நியாயமானது என்பதால் செயல்படுத்துகிறோம்" என்றார்.

கூட்டணி தொடரும்..

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் என இல.கணேசன் கூறியிருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், "எந்தத் தாயும் தன் குழந்தையைக் குறைத்து மதிப்பிடமாட்டார் அல்லவா? அதிமுகவின் பலம் என்னவென்பது மக்களுக்குத் தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என முதல்வர், துணை முதல்வர் அறிவித்துள்ளார்கள். அந்த முடிவை நாங்கள் ஏற்று நடப்போம்" என்றார்.

கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தில் பெண் மோதி காயமடைந்த சம்பவம் குறித்த கேள்விக்கு, "அதிமுக இப்போதெல்லாம் எங்குமே ப்ளக்ஸ் பேனர்கள் வைப்பதில்லை. அதை பிரமாணப் பத்திரமாகவே முதல்வர், துணை முதல்வர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர், அந்தக் கொடிக்கம்பம் மிகவும் பழையது. சம்பவத்துக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துவிட்டோம்" எனக் கூறினார்.

ஓராண்டுக்குள் விருதுநகரில் மருத்துவக் கல்லூரி..

அவர் மேலும் பேசும்போது, "விருதுநகரில் ஓராண்டுக்குள் மருத்துவக் கல்லூரி கட்டி முடிக்கப்படும். விரைவில் அதற்காக அடிக்கல் நாட்டப்படும். முதல்வர் அதற்காக நேரில் விருதுநகர் வருகிறார். மருத்துவக் கல்லூரிக்காக 24 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய ஹவுசிங் போர்டு உள்ள இடத்தில்தான் மருத்துவக் கல்லூரி அமையப் போகிறது" என உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x