

காய்ச்சல், தொண்டை புண், கிருமி தொற்றுக்கு பயன்படுத்தப்படும் 36 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் உள்ளன என்று மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகள், மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,163 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 1,127 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், குடற்புழு நீக்கம், கிருமித் தொற்று, தொண்டைப் புண் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் 36 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் திருப்போரூரில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தும், ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட இரண்டு மருந்துகளும் தரமற்றவையாக உள்ளன.
இந்த விவரங்களை, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (https://cdsco.gov.in/) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. போலி மற்றும் தரமற்ற மருந்துகள் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதய ரத்தக் குழாய்களில் பொருத்தப்படும் ஸ்டென்ட், ஃபேஸ் மேக்கர், செயற்கை மூட்டு உபகரணம் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களின் விற்பனை மற்றும்தரத்தை ஒழுங்குமுறைபடுத்துவதற்காக 754 சிறப்பு அதிகாரிகளை பணியமர்த்த மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.