Published : 04 Aug 2015 04:10 PM
Last Updated : 04 Aug 2015 04:10 PM

மதுவுக்கு எதிராக போராடியதால் 5 மணி நேரம் போலீஸார் சித்ரவதை: விளையாட்டு வீரர் புகார்

மதுவுக்கு எதிராக போராடியதால் 5 மணி நேரம் போலீஸார் சித்ரவதை செய்தனர் என்று, ஆற்றூரை சேர்ந்த விளையாட்டு வீரர் தெரிவித்தார்.

ஆற்றூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி த.மா.க. சார்பில் சனிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. ஞாயிற்றுக் கிழமை வரை அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை.

இதையடுத்து தேமானூர் பகுதியை சேர்ந்த டேவிட்ராஜ் என்ற இளைஞர் அப்பகுதியில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அவரை போலீஸார் மீட்டனர். தன்னை போலீஸார் சுமார் 5 மணி நேரம் தாக்கியதாக கூறி தற்போது அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

போலீஸார் அடித்தனர்

அவசர சிகிச்சை பிரிவில் இருந்த டேவிட்ராஜை(27) ‘தி இந்து’ வுக்காக சந்தித்த போது அவர் கூறியதாவது:

‘சின்ன வயசுல இருந்தே நான் வாள் சண்டை விளையாட்டில் நிறைய பரிசு வாங்கிருக்கேன். தேசிய அளவில் 7 முறை பரிசு வாங்கிருக்கேன். பி.எஸ்.சி. உடற்கல்வியியல் இரண்டாம் ஆண்டு படிச்சுட்டு இருந்தப்போ ராணுவத்தில் வேலைக்கு தேர்வானேன். ஆனா அரசியல் ஆர்வத்தால் வேலைக்கு செல்லவில்லை. அதோட படிப்புக்கும் முழுக்கு போட்டுட்டு சொந்தமா செங்கல் சூளை வைச்சு இருக்கேன்.

கடந்த 1-ம் தேதி எங்க ஊருல தமாகா சார்புல மதுவுக்கு எதிரா உண்ணாவிரதம் தொடங்குனோம். ஆனா 2-ம் தேதி வரை அதிகாரிங்க யாரும் பேச்சுவார்த்தைக்கு வரல. அதனால் நான் அங்க இருந்த செல்பேசி கோபுரம் மேல ஏறுனேன். அப்போ அங்க தக்கலை ஏஎஸ்பி விக்ராந்த் பாட்டீல் வந்தார். நான் டவரில் இருந்து இறங்கியதும் அதிரடிப்படை வண்டியில் ஏத்தி, ‘ இனி மதுவிலக்கு போராட்டம்ன்னு போவியான்னு’ கேட்டு, ஏஎஸ்பியும், அதிரடிப்படை போலீஸாரும் அடிச்சாங்க’ என்றார் அவர்.

தமாகா மனு

மருத்துவமனை வட்டாரத்தில் கேட்ட போது, ‘டேவிட்ராஜ்க்கு இ.சி.ஜி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை’ என்றனர்.

இதனிடையில் ஏஎஸ்பி விக்ராந்த் பாட்டீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேவிட்ராஜின் தந்தை தங்கசாமி, கிள்ளியூர் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப், முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் ஆகியோர் தலைமையில் தமாகாவினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஏஎஸ்பி விக்ராந்த் பாட்டிலிடம் கேட்ட போது, ‘செல்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விடுவிக்கப்பட்டார். அதைத் தாண்டி இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x