

மாத்திரைகள் இல்லை என அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறிவிப்பு பலகை வைக்கும் சூழல் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தை சிபிஎம் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
யூனியன் பிரதேசமான புதுச் சேரியில் 8 பெரிய மருத்துவமனை கள், 4 சமுதாய நலவழி மையங்கள், 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. நிதி நெருக்கடி காரண மாக மருத்துவமனைகள், சமுதாய நலவழி மையங்கள் நேடியாக மருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் அரசு மருந்தகத்திலி ருந்து நேரடியாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
ஆண்டுதோறும் இ-டெண்டர் மூலம் மருந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிடமிருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப் படுகிறது. இந்த நிறுவனங்கள் விநியோகம் செய்யும் மருந்துக் கான பணத்தை கொடுக்க 90 நாட்கள் வரை காலக்கெடு விதிக்கின்றன. தற்போது பட்ஜெட்டில் அறிவிக் கப்படும் நிதி என்பது காகித வடிவில் மட்டுமே இருக்கிறது. இச்சூழலில் மருந்து கொள் முதலுக்கு ஒதுக்கப்படும் நிதி போது மானதாக இல்லை.
இதுபோன்ற சூழலில் சுகாதாரத் துறை மருந்து கொள்முதல் செய்த பல நிறுவனங்களுக்கு காலக் கெடுவுக்குள் பணத்தை வழங்க முடியவில்லை. இதனால் பாக்கி தொகையானது பல கோடிகளை கடந்து விட்டது.
மருந்து தட்டுப்பாடு
இப்பிரச்சினையை சமாளிக்கும் வகையில், சுகாதாரத்துறையானது அத்தியாவசிய மருந்துகளை மட்டும் வேறு நிறுவனங்களிலிருந்து குறைவாக வாங்கி மருத்துவம னைக்கு விநியோகம் செய்து வருகி றது. இதனால் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங் களில் தொடர்ந்து மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளி களிடம் இருமல், தலைவலி, அல்சர் போன்ற பாதிப்புகளுக்கு மாத்திரை இல்லையென்றால், அதனை வெளியே வாங்கி கொள்ளுமாறு மருந்தாளுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மாத்திரைகள் விலை சற்று குறைவு என்பதால், நோயாளிகள் வெளியே வாங்கி கொள்கின்றனர்.
தற்போது கூட ஆன்டிபயாடிக், அல்சர் மாத்திரைகள், கிளினிக்கல் மருந்துகள், உயர் ரத்த அழுத்த மாத் திரைகள் போன்றவற்றிற்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆரம்ப சுகா தார நிலையங்களில் பிபி மாத்திரை கள் இல்லை என்று தெரிவித்து வந்தனர். தற்போது வாயிலில் பல கையை எழுதி வைக்கத்தொடங்கி விட்டதால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுகாதார துறை அலுவலகம் முற்றுகை
மருந்துகள் இருப்பு இல்லாததைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிபிஎம் நகரச்செயலர் மதிவாணன், பிரதேச செயலர் ராஜாங்கம், மாநில குழு உறுப்பினர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற மதிவாணன் கூறுகையில், "எம்ஆர்ஐ ஸ்கேன் பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் இயங்கவில்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவான போக்குடன் அரசு செயல்படுகிறது. தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு ஆதரவு போக்குடன் அரசு மருத்துவக்கல்லூரியும் சீரழிக்கப்படுகிறது. அரசு உயர் அதிகாரிகளுக்கு புதுச்சேரியில் பஞ்சம் இல்லை. ஆனால், அரசு மருத்துவமனைகளில் கட்டு கட்ட துணியும் இல்லை. மருந்தும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ரத்த அழுத்தம், நீரழிவு நோய் ஆகியவற்றுக்கான மாத்திரை கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும். இதர மாத்திரைகள் நிதி கிடைத்த பிறகே விநியோகிக்கப்படும் என்றனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.