

மாற்றுத்திறனாளிகள் ஆதர வற்றவர்களாக இருந்தால்தான் உதவித்தொகை என்ற அரசாணை நகலை எரிக்கும் போராட்டத்தை வரும் 25-ம் தேதி தமிழகம் முழு வதும் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், தலைவர் பா.ஜான்சிராணி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பிரிவினருக்கு தற்போது மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 40 சதவீதம் உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில், பல்வேறு விதிமுறைகளை மாற்றி கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், முதல் விதியாக ஆதரவற்றவராக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூலை மாதத்தில் முதல்வருக்கு கடிதம் எழுதினோம். துறை ஆணையரிடமும் கோரிக்கையை வைத்தோம். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
எனவே, மாநில முழுவதும் சுமார் 100 வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 25-ம் தேதி இந்த அரசாணை நகலை எரிக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், கே.கே.நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தவுள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் மொத்தம் 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கவுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.