Published : 13 Nov 2019 08:32 PM
Last Updated : 13 Nov 2019 08:32 PM

கோவையில் கொடிகம்பம் சாய்ந்ததால் பெண்ணுக்கு விபத்து நேர்ந்ததா?- ஆராய்ந்து பின் மனு தாக்கல் செய்யுங்கள் : டிராபிக் ராமசாமிக்கு உயர் நீதிமன்றம் பதில்

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால், லாரியில் சிக்கி இளம் பெண் படுகாயம் அடைந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பான முறையீட்டை சம்பவத்தை விரிவாக ஆராய்ந்து தகுந்த ஆதாரத்துடன் மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் நாகநாதன் மகள் ராஜேஸ்வரி என்கிற அனுராதா, சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கணக்காளராக வேலைபார்க்கிறார். நவம்பர் 11-ம் தேதி காலை வேலைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதி வழியாக சென்றார்.

அப்போது அந்த பகுதி சாலை தடுப்பில் கட்டப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் ஒன்று திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ராஜேஸ்வரி, தன்மீது கொடிக்கம்பம் விழாமல் தவிர்ப்பதற்காக திடீர் பிரேக் போட்டதால், நிலைதடுமாறிய நிலையில் தனது வாகனத்தோடு சறுக்கி கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ராஜேஸ்வரியின் கால் மீது ஏறியதில் இரு கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கி கால்கள் முறிந்து படுகாயம் அடைந்தார். அதேவழியாக வந்த விஜயானந்த் என்பவரும் லாரியின் பின்பக்கத்தில் மோதி காயம் அடைந்தார். ராஜேஸ்வரி தனியார் மருத்துவமனையிலும், விஜயானந்த் கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வுமுன் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்தார்.

மனுவாக தாக்கல் செய்தால் பட்டியலில் வரும்போது விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் சம்பவம் மற்றும் கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, தகுந்த ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x