கொடைக்கானலில் பாதரச ஆபத்தைத் தடுக்கக் கோரி செப்.4-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்

கொடைக்கானலில் பாதரச ஆபத்தைத் தடுக்கக் கோரி செப்.4-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

கொடைக்கானலில் கொட்டிய பாதரச கழிவுகளை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் பாதுகாப்பாக அப்புறப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 4-ம் தேதி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் நகரின் ஏரிகள், சுற்றுச் சூழலையும் நச்சு மயம் ஆக்கும் ஆபத்தை 1984 இல் இங்கு அமைக்கப்பட்ட இந்துஸ்தான் யூனிலீவர் தெர்மா மீட்டர் தொழிற்சாலை ஏற்படுத்தி உள்ளது.

2001-ல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையால் மூடப்பட்டபோதிலும், இங்கு கொட்டப்பட்ட தெர்மா மீட்டர் பாதரசக் கழிவுகளில் 290 டன் கழிவுகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை யூனிலீவர் நிறுவனத்தின் தலைமையகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அவ்விதம் அகற்றப்படவில்லை. ஆலையின் பின்னால் இருந்த சோலைக் காட்டில் பாதரசக் கழிவுகள் கொட்டப்பட்டன.

பழைய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் பாதரசம் கொண்ட உடைந்த தெர்மா மீட்டர்கள் பல ஆண்டுகளாகக் கிடக்கின்றன. மூஞ்சிக்கல்லில் உள்ள காயலான் கடையிலும், ஆலையின் பின் உள்ள சோலைக் காட்டிலும் பாதரசம் அடங்கிய ஏழு டன் எடையுள்ள குப்பையை கொட்டி வைத்திருந்தது பிடிபட்டது.

பாதரசம் சுற்றுச் சூழலுக்கும், உடல் நலனுக்கும் மிகவும் கேடு செய்யும். கடுமையான நோய்களை மனிதர்களுக்கு ஏற்படுத்தும். கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களும் குறையுடைய குழந்தைகளாக பிறக்கின்ற அவலம் நேரும். மனித உயிர்களுக்கு ஆபத்தும் நேரும்.

ஒரு கிலோ கிராம் மண்ணுக்கு ஒரு மில்லி கிராம் பாதரசம்தான் இங்கிலாந்து நாட்டில் அனுமதிக்கப்படுகிறது. நெதர்லாந்து நாட்டில் ஒரு கிலோ கிராம் மண்ணுக்கு 10 மில்லி கிராம் பாதரசம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கொடைக்கானலிலோ, ஒரு கிலோ கிராம் மண்ணில் 100 மில்லி கிராம் பாதரசம் கலந்துள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு ஆபத்து இல்லை.

கொடைக்கானலுக்குப் பெருமை தரும் பேரிஜம் ஏரியும், கொடைக்கானல் ஏரியும் பாதரசத்தால் மாசுபட்டுள்ளன.

இதற்குக் காரணமான இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், இங்கு கொட்டப்பட்டுள்ள பாதரசக் கழிவுகளை பாதுகாப்பாக எடுத்து உரிய முறையில் அமெரிக்காவிற்கோ, அல்லது அந்த நிறுவனம் முடிவு எடுக்கின்ற பகுதிக்கோ எடுத்துச் செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் மேற்கொள்ள வேண்டும்.

இதன், அவசியத்தை வலியுறுத்தி செப்டம்பர் 4 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை 11 மணி அளவில், கொடைக்கானல் நகரில் என்னுடைய தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in