Last Updated : 13 Nov, 2019 06:30 PM

 

Published : 13 Nov 2019 06:30 PM
Last Updated : 13 Nov 2019 06:30 PM

கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்: உறவினர்களால் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் உடல்

மணிவாசகம்: கோப்புப்படம்

சேலம்

கேரள மாநில போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள கணவாய்புதூர்காடு, ராமமூர்த்ததி நகரை சேர்ந்தவர் மணிவாசகம்(55). இவர் தமிழக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைமை பொறுப்பாளராக இருந்தார். இவரது மனைவி கலா, சகோதரி சந்திரா, அவரது கணவர் சுந்தரமூர்த்தி ஆகியோரும் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள். திருச்சி பெண்கள் சிறையில் கலா, சந்திரா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை புழல் சிறையில் சுந்தரமூர்த்தி அடைக்கப்பட்டுள்ளார்.

மாவோயிஸ்ட் மணிவாசகம் சிறு வயது முதல் மாவோயிஸ்ட் அமைப்பில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார். ஊத்தங்கரையில் ஆயுதப்பயிற்சி எடுத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மணிவாசகம் மீது காவல் துறை பதிவு செய்துள்ளது. காவல் துறை தேடுதலில் இருந்து வந்த மாவோயிஸ்ட் மணிவாசகம், கடந்த மாதம் 28-ம் தேதி கேரள மாநிலம், அட்டப்பாடி வனப்பகுதியில் பதுங்கியிருந்தார்.

அப்போது, கேரள மாநிலம் தண்டர் போல்ட் படைக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், மணிவாசகத்தை அதிரடிப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

கேரள மாநிலம், திருச்சூர் அரசு மருத்துவமனையில் மணிவாசகம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மணிவாசகத்தின் மற்றோரு சகோதரி லட்சுமி, அவரது கணவர் சாலிவாகனம் ஆகியோர் இன்று (நவ.13) திருச்சூர் சென்று, மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை பெற்று, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் கொண்டு வந்து கொண்டிருக்கிறனர்.

திருச்சி சிறையில் உள்ள மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோர் மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண வேண்டி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பரோல் கேட்டு மனு செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 15-ம் தேதி வரும் நிலையில், கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல், சேலம் அருசு மருத்துவமனையில் வைக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, அரசு மருத்துவமனையைில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x