

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என நவம்பர் 19-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை சரியாக பராமரிக்க உத்தரவிடக் கோரி சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஆடிட்டர் வந்தனா சக்காரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மாநகராட்சி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும், வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாலும், மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாலும் பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் இன்று (நவ.13) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, என்.எஸ்.சி. போஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகவும், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் நடத்த தடை விதிக்கப்பட்ட பகுதியாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.