Published : 13 Nov 2019 05:19 PM
Last Updated : 13 Nov 2019 05:19 PM

தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலத்தில் உள்ளது: சிகாகோவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலத்தில் உள்ளது என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அரச முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (நவ.12) சிகாகோவில் இந்திய -அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கத்தில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து பேசியதாவது:

"அமெரிக்க தொழில் முனைவோர் மற்றும் அமெரிக்க வாழ் இந்திய தொழில் முனைவோர் ஆகிய இரு தரப்பினரையும் தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன். தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று. இந்தியவின் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலம். முதலீடுகளுக்கு மிகவும் ஏற்ற மாநிலம் .

எப்டிஐ பைனான்சியல் டைம்ஸ் குரூப் இதழ் ஆய்வின்படி, 2018-வது ஆண்டில் உற்பத்தி துறையில் தமிழ்நாடு அதிக அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. நிதி அயோக் வெளியிட்டுள்ள இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் குறியீடு-2019 அடிப்படையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

நாட்டின் ஆட்டோமொபைல் தலைநகரமாகத் திகழும் தமிழ்நாட்டில் ஒரு நிமிடத்திற்கு மூன்று கார்கள், 30 விநாடிக்கு 1 இரு சக்கர வாகனம், 90 வினாடிக்கு 1 டிரக் உற்பத்தி செய்யும் வலுவான, உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது.

விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் போன்றவற்றில் மிக அதிகமான அளவில் திறமையான உழைப்பாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள்.

சென்னைக்கு 14.8 டி.பி.பி.எஸ் அலைவரிசையுடன் வரும் 3-சப்மேரின் கேபிள், மாநிலத்தில் உள்ள மிகை மின்சாரம், உயர்ந்த ரக மனித வளம் ஆகியவை தகவல் பூங்கா மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தொழிற் பூங்கா, தகவல் தொழில் நுட்ப பூங்கா மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்குறைய 8000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தொழில் தொடங்குவதற்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.

எந்த சந்தேகமும் இன்றி, தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலத்தில் உள்ளது.

இங்கு வாழும் தமிழர்களுக்கு - தாங்கள் பிறந்த தமிழ்நாட்டின் மீது ஒரு தனிப்பாசம் இருக்கும். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்திலிருந்து வந்து இங்கு இருப்பவர்களும், அமெரிக்காவில் தொழில் புரிவது எப்படி பலனளிக்கும் விதத்தில் இருக்கிறதோ அதே மாதிரி தமிழகத்திலும் தொழில் புரிவது பலனளிக்கும் என்பதை உணர வேண்டும்,"

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x