Published : 13 Nov 2019 05:14 PM
Last Updated : 13 Nov 2019 05:14 PM

ஸ்டாலின் மிசா கைது சர்ச்சை: கருணாநிதி எழுதிய கடிதத்தை ஆதாரம் காட்டும் திமுக

திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்கு, மறைந்த கருணாநிதி எழுதிய கடிதத்தை ஆதாரமாக வெளியிட்டுள்ளது திமுக.

மிசாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என சிலர் சர்ச்சை கிளப்பி வருகின்றனர். இது விவாத பொருளாக உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தை பாஜகவும் அதிமுக, அமைச்சர்கள் சிலரும் பேசியதோடு சமூக வலைதளத்திலும் வைரலாக்கி வருகின்றனர்.

மிசா கைதுக்கான ஆதாரத்தை ஸ்டாலின் வெளியிட வேண்டும்' என்று கோரிக்கையும் வைத்து வருகிறார்கள். இதுகுறித்து திமுக தரப்பிலும், ஸ்டாலினும் பதிலளித்தாலும் திரும்ப திரும்ப இது விவாதப்பொருளாக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 1977-ம் ஆண்டு கருணாநிதி எழுதிய கடிதத்தை ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தக்கடிதம் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தப் பின்னர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில்( சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே முன்பு இருந்தது) அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்ட நாளில் நவம்பர் 27 அன்று உதயநிதி ஸ்டாலின் பிறந்த தகவல் அறிந்து ஸ்டாலினுக்கு மறுநாள் நவம்பர் 28, 1977-ம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதினார். ஸ்டாலினுக்கு மகன் பிறந்ததை குறிப்பிடும் அவர் நீ முரசொலி மாறன் மற்றும் உடன்பிறப்புகளுடன் மிசா கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது முரசொலி மாறனுக்கு பெண் குழந்தை பிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுகவினர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு, "'தலைவர் கலைஞர் அவர்கள் 1977-்ல் சிறையிலிருந்தபோது, கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்ததையொட்டி எழுதிய புகழ்மிக்க வாழ்த்துக் கடிதத்தில், மறைந்த முரசொலி மாறன் தளபதியுடன் மிசாவில் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருக்கு மகள் பிறந்ததைக் குறிப்பிடும் வரிகள்!” என்று தெரிவித்து கருணாநிதி எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கருணாநிதி எழுதியிருப்பதாவது:

அன்புள்ள ஸ்டாலின்,

உனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி. சாந்தாவுக்கு என் வாழ்த்துகளைக் கூறவும். 1953-ல் திருச்சி சிறையில் ஆறுமாத தண்டனை பெற்று நானிருந்த போது நீ கைக்குழந்தை. வீட்டிலிருந்து என்னைக் காண வருபவர்களோடு குழந்தையாக இருந்த நீயும் வருவாய். இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சிறையில் மிசா கைதியாக (1976) ஓராண்டு நீ இருந்த போது நான் உன்னைக் காண வந்து கொண்டிருந்தேன்.

உன்னுடனும்,கழக உடன்பிறப்புக்களுடனும் தம்பி மாறன் மிசா கைதியாக இருந்த போது அவனுக்கோர் பெண் பிறந்தது. அந்தக் குழந்தையும் தன் தந்தையைப் பார்க்க சிறைச்சாலைக்குத் தான் வந்து கொண்டிருந்தது. இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா?

இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல நமது இயக்கமாம் பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.

பொது வாழ்வு பூங்கா விநோதமல்ல! புயலை எதிர்த்து நிற்பது!

இதைப் புரிந்து கொள்ளாத சில பேர், இன்னமும் நாட்டிலே இருக்கிறார்கள்.

பாவம்; அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.

புதிய பேரனுக்கு என் வாழ்த்துக்கள்

அன்புள்ள,

மு.கருணாநிதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x