Published : 31 Mar 2014 12:00 AM
Last Updated : 31 Mar 2014 12:00 AM

மதச்சார்பின்மை பற்றி காங்கிரஸுக்கு யாரும் பாடம் கற்றுத்தர அவசியமில்லை: கருணாநிதிக்கு ஜி.கே.வாசன் பதில்

மதச்சார்பின்மை குறித்து காங்கிரஸுக்கு யாரும் பாடம் கற்றுத் தர வேண்டிய அவசியம் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பதிலளித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் சார்பில் பிரச்சாரப் பாடல்களின் 2 குறுந்தகடுகள் மற்றும் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள், சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தலைமை வகித்தார். பாடல் குறுந்தகடுகளை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:

மத்திய அரசின் நிதி யுதவியுடன் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளன. இந்த திட்டங்கள் குறித்து, காங்கிரஸார் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறோம். இந்திய மக்கள் நிலையான, வளர்ச்சி தரக்கூடிய ஆட்சியையே விரும்புகின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸால் மட்டுமே இந்தியாவில் நிலையான, வளர்ச்சியான ஆட்சியைத் தர முடிகிறது.

இந்தத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் கேப்டன் இல்லாத கப்பலைப் போல், யார் பிரதமர் வேட்பாளர் என்பதைச் சொல்லாமலே வாக்கு கேட்கின்றன.

இவ்வாறு வாசன் கூறினார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

நன்றி கெட்ட காங்கிரஸார், மனம் வருந்தினால் பொது மன்னிப்பு என்ற முறையில் அவர்களை ஆதரிப்போம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியினருக்கு தனிப்பாதை கிடைத்துள்ளது. அனைத்து தலைவர்களும் ஒரு சேர மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்தப் பாதை எங்களுக்கு வெற்றிப் பாதையாக அமையும்.

உங்கள் நண்பர் விஜயகாந்த், மோடிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறாரே?

நாங்கள் காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபடுகிறோம். இப்போது நடக்கும் போரில் சேராத கட்சிகளைப் பற்றி நாங்கள் அக்கறை கொள்வதில்லை.

சிதம்பரம் தொகுதியில் சீட் கேட்ட மணிரத்தினம், பாமகவில் சேர்ந்து விட்டாரே?

எங்கள் கட்சி தேசியக் கட்சி என்பதால், வேட்பாளர் குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். காங்கிரஸ்காரர்கள் எந்தச் சூழலிலும் பொறுமை காத்து இருப்பார்கள். இனி காங்கிரஸுக்கு வசந்தகாலம்தான்.

சேது திட்டத்தை வேறு பாதையில் நிறைவேற்ற வேண்டும் என மதிமுகவும் அதிமுகவும் கோரிக்கை விடுத்துள்ளனவே?

சேது சமுத்திரத் திட்டம் வந்தால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் வளர்ச்சியடையும். தமிழக ஆட்சியாளர்கள் நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.

மதச்சார்பற்ற நிலைக்கு வந்தால் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக கருணாநிதி கூறியிருக்கிறார்?

காங்கிரஸ் கட்சி மதச்சார் பின்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கை சின்னம் மதச்சார்பின்மைக்கு அடையா ளம். எனவே, மதச்சார்பின்மைக்கு எங்களுக்கு யாரும் பாடம் கற்றுத் தரவேண்டிய அவசிய மில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கை சின்னம் மதச்சார்பின்மைக்கு அடையாளம். எனவே, மதச்சார்பின்மைக்கு எங்களுக்கு யாரும் பாடம் கற்றுத் தரவேண்டிய அவசியமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x