Published : 13 Nov 2019 03:47 PM
Last Updated : 13 Nov 2019 03:47 PM

10 ஆண்டுகளுக்குப் பிறகு வைகையில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்: ராமநாதபுரம் மாவட்டம் கடைமடை விவசாயமும் செழிக்க வாய்ப்பு

மதுரை

கடந்த 2008-ம் ஆண்டிற்கு பிறகு வைகை அணையில் இருந்து ஆற்றில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் வைகை ஆற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

வைகை அணையில் தேக்கப்படும் தண்ணீர் மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீருக்கே பற்றாக்குறையாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஓரளவு நல்ல மழை பெய்ததால் பெரியாறு பாசனக்கால்வாய் பகுதியில் இரு போகம் விவசாயம் செழிப்பாக நடந்தது. ஆனால், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியவில்லை.

இந்த இரு மாவட்டங்களில் வைகை தண்ணீரை கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கண்மாய்கள் வறட்சிக்கு இலக்காகின. அதனால், வைகை அணை எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அது நிறைவடையாமல் குடிநீருக்காக கட்டிய அணை போல் தோன்றியது.

வைகை ஆற்றில் கடந்த காலங்களில் ஆண்டுமுழுவதும் பெரும்பாலான நாட்களில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வைகை ஆற்றில் வைகை அணையில் திறந்துவிட்டால் மட்டுமே தண்ணீர் வரும்நிலை ஏற்பட்டது. அதுவும், குடிநீருக்காகவும், சித்திரைத் திருவிழாவுக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அதனால், ஆண்டின் பெரும்பாலான நாட்களில் வைகை ஆறு வறட்சிக்கு இலக்காகிவிட்டது.

10 ஆண்டுகளுக்குப் பின்..

இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்பாகவே பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் ஒரளவு தென் மேற்கு பருவமழை பெய்ததால் பெரியாறு அணைக்கும், வைகை அணைக்கும் நீர் வரத்து அதிகரித்தது. அதனால், வைகை அணையில் இருந்து பெரியாறு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் விவசாயம் அமோகமாக நடக்கிறது.

கடந்த 9-ம் தேதி ராமநாதபரம் பாசனத்திற்காகவும், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால், வைகை அணையில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதுகுறித்து வைகை பெரியாறு வடிநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘வைகை அணையில் வைகை பங்கிட்டு தண்ணீர் அடிப்படையில் 1,500 மில்லியன் கன அடிக்கு மேல் இருந்தால் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் அனுமதித்தால் உடனே திறக்கலாம்.

தற்போது வைகை அணையில் 2,300 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 10 ஆண்டிற்கு தற்போதுதான் முதல் முறையாக விவசாய பாசனத்திற்கு 2,500 கன அடி தண்ணீர் திறந்துள்ளோம். இயல்பாக மழை தண்ணீரும் சேர்ந்து வருவதால் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் வருகிறது.

கடைசியாக 2008ம் ஆண்டில் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம். தற்போது திறந்துவிட்ட தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சேர்ந்துவிட்டது.

பொதுவாக வைகை அணையில் இருந்து ஆற்று வழியாக திறந்துவிடப்படும் தண்ணீர், பகுதி-1, பகுதி-2, பகுதி-3 ஆகிய இடங்களில் உள்ள விவசாயநிலங்களுக்கு கொடுக்கப்படும். பகுதி-3 ஆற்றுப்பாசனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உள்ளது. அணையில் இருந்து விடப்படும் வைகை ஆற்று தண்ணீர், 241 கண்மாய்களுக்கு சென்று

67,837 ஏக்கர் விவசாய பாசனம் நடக்கிறது. ஆற்றில் தற்போது செல்லும் தண்ணீரால் 3ல் 1 பங்கு கண்மாய்கள் நிரம்ப வாய்ப்புள்ளது. பகுதி-2 ஆற்றுப்பாசனத்தில் சிவகங்கை மாவட்டம் உள்ளது.

இதில், வைகை ஆறு தண்ணீர் 87 கண்மாய்களுக்கு சென்று 40,743 ஏக்கர் விவசாயம் நடக்கும். வரும் 17ம் தேதி சிவகங்கை விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உள்ளோம். பகுதி-1 ஆற்றுப்பாசனத்தில் மதுரை மாவட்டம் உள்ளது. இங்கு வைகை ஆற்று தண்ணீர் 46 கண்மாய்களுக்கு சென்று 27,529 ஏக்கர் விவசாய பாசனம் பெறும், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x