Published : 13 Nov 2019 03:49 PM
Last Updated : 13 Nov 2019 03:49 PM

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரும் ஸ்டாலின்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும், ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“ காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக உள்துறைச் செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், இன்னும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக இன்று வெளிவந்திருக்கும் செய்தி, அதிமுக அரசு ஊழலை ஊறப்போடவும், விசாரணையை முடிந்தவரை தாமதப்படுத்தவும் வெட்கம் ஏதுமின்றி முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஊழல் புகாருக்குள்ளான டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள காவல்துறை தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி.,யை அதே பதவியில் வைத்துக் கொண்டு, இந்த ஊழல் தொடர்பான அலுவலகக் கோப்புகளை பத்திரமாக வைத்திருந்த அமைச்சுப் பணியாளர் ராஜாசிங்கை மட்டும் திடீரென்று ராமநாதபுரத்திற்கு மாற்றியிருப்பது ஆதாரங்களை அழிக்கும் முதற்கட்ட முயற்சியோ என்ற வலுவான சந்தேகம் எழுகிறது.

காவல்துறை தொழில்நுட்ப பிரிவில் உள்ள எஸ்.பி - அவருக்கு ஆணையிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதிமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டிய கடமை உள்ள தமிழக காவல்துறையையும் ஊழல் துறையாக மாற்றி வருவது கண்டனத்திற்குரியது.

2019 ஜனவரி மாதத்தில் வெளிவந்த இந்த ஊழல் புகார் குறித்து, 'குட்கா' ஊழல் வழக்கில் ரெய்டு செய்யப்பட்ட தமிழ்நாடு காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெறும் வரை, எந்த விசாரணையும் நடத்தாமல் கிடப்பில் போட்டார்.

பிறகு புதிய டிஜிபி திரிபாதி பொறுப்பேற்ற பிறகு இந்த ஊழலை விசாரிக்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி - அந்த கடிதத்தின் அடிப்படையில் செப்டம்பர் 2019-ல் விசாரணைக்கு உத்தரவிட்டார் உள்துறைச் செயலாளர்.

ஆனால், ஏறக்குறைய 11 மாதங்களாக இந்த புகார் மீது எந்த விசாரணையும் நடக்கவில்லை. அதிமுக அரசு ஊழல்வாதிகளை எப்படியாவது காப்பாற்றுவது இயற்கை. அதில் அதிர்ச்சியடைய ஏதுமில்லை. ஆனால், சுதந்திரமாக செயல்பட வேண்டிய லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையும் - அதில் நேர்மையானவர் என்று காவல்துறை வட்டாரத்தில் அறியப்படும் இயக்குநர் விஜயகுமார் ஐபிஎஸ்-சும் ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றுவது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.

ஊழல் நடவடிக்கை எடுக்க உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டும், ஏன் கோப்பினை மூட்டை கட்டி வைத்திருக்கிறார்? ஒரு அரசு ஊழியர் மீது புகார் வந்து விட்டாலே, அவரை வேறு பதவிக்கு மாற்றுமாறு அரசுக்கு அறிவுறுத்தும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, ஏன் காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய புகாரில் ஈடுபட்ட அதிகாரிகளை மாற்ற இதுவரை அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை?

நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்த வேண்டிய லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை இப்படி ஏனோ அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்பாக மாநில விஜிலென்ஸ் ஆணையத்தின் தலைவர் பதவியையும் தன்னிடமே வைத்துள்ள தலைமைச் செயலாளர், இந்த மெகா ஊழல் பற்றியும், லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில் தாண்டவமாடும் அரசியல் தலையீடு குறித்தும் கண்டு கொள்ளாமல், மவுனமாக இருப்பது ஏன்?

இதேபோல், குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு தமிழக அதிகாரிகள் மீது 'குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய' மத்திய விழிப்புணர்வு ஆணையம் அனுமதி கேட்டும், இதுவரை அதிமுக அரசு அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

அதிமுக அரசு தமிழகத்தில் ஊழலாட்சி நடத்தி வருவதும்; அதைக் கண்டு கொள்ளாமல், ஏதோ காரணங்களுக்காக அதிமுக அரசைக் காப்பாற்றுவதும்; இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்பட்டிருக்கும் மகா கேடு என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் காவல்துறையிலேயே ஊழல் செய்த பெருச்சாளிகளைப் பிடித்துக் கொண்டுவந்து, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தருவதோடு மட்டுமின்றி - ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து நம்பகத்தன்மையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலாளர் ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையாக விசாரணை நடத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x